பிணை பெற முடியாத வகையில் வழக்கு தொடுக்கும் காவற்துறையினருக்கு, நீதிமன்றம் எச்சரிக்கை..
இணையத்தில் தவறான செய்திகளை வெளியிட்டதாக கூறி, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் சந்தேகநபர்கள் வேண்டுமென்றே ஏதேனும் குற்றத்தை இழைத்தார்களா என்பதை முதலில் சரிபார்க்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ரம்சி ரசீக்கிற்கு எதிராக கடுமையான சட்டங்களின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுகின்ற சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை.
ஆகவே அவ்வாறான சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முன்பதாக அவர்கள் வேண்டுமென்றே குற்றங்களை இழைத்தார்கள் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதற்கு முழுமையான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக சுயாதீன அரச ஆணைக்குழுக்கள் மாத்திரமன்றி, இணைய ஊடக செயற்பாட்டாளர்களும் எழுத்துபூர்வமாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.
சிறைவைக்கும் ஒரே நோக்கம்.
கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை சிறைவைக்கும் ஒரே நோக்கத்துடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன சட்டத்தை காவற்தறையினர் பயன்படுத்துவதாக இணைய ஊடக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடங்களிலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை வெளியிட்டுவந்த சமூக செயற்பாட்டாளர் ரம்சி ரசீக் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இரகசியப் காவற்தறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
கோவிட் 19 தொற்றுடன் பரவிவரும் தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்கு ஜிகாத் சிந்தனைக்கு தயாராக வேண்டும் என கருத்து வெளியிட்டார் என்ற அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பொதுமக்கள் குழப்பம்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரகசிய காவற்தறையினர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான உப காவற்துறை பரிசோதகர் துசித்த குமார, எந்தவொரு பயங்கரவாத குழுவும் முதலில் மனதை மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ரம்சி ரசீக்கும் சில வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருபகுதி மக்களிடையே குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னரும் சந்தேகநபர் இவ்வாறான பதிவுகளை இட்டுள்ளதாகவும் அந்தப் பதிவுக்கான பதில் கருத்துக்கள் ஊடாக சில பொதுக் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் உப காவற்துறைப் பரிசோதகர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
ரம்சி ரசீக் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன், ரம்சி ரசீக், இஸ்லாமிய கடும்போக்குவாதம் மற்றும் இனவாதத்திற்கு எதிராக குரல்கொடுத்த ஒரு இளைஞர் என மன்றில் சுட்டிக்காட்டினார்.
இதனை நிரூபிக்கும் வகையில் ரம்சி ரசீக்கினால் வெளியிடப்பட்ட பல எழுத்துக்களின் நகல்களையும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முஸ்லீம் எதிர்ப்பு இனவாதம்.
நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாதம் காணப்படுவதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
ரம்சி ரசீக்கை கைதுசெய்வதற்கு காரணமாக அமைந்த பதிவு, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமையவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றுக்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ரம்சி ரசீக்கின் கருத்துப்பதிவின் ஊடாக முஸ்லீம் மக்கள் வன்முறை தவிர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாகவும் ஒரு வார்த்தையை மாத்திரம் கருத்தில் எடுப்பதை விடுத்து அந்தப் பதிவின் முழுமையான கருத்தை உற்றுநோக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ரம்ஸி ரசீக்கின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த எம்.ஏ.சுமந்திரன், அந்த சூழ்நிலை மற்றும் தாம் முன்வைத்த கருத்துக்களை கருத்தில் எடுத்து அவருக்கு பிணைவழங்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
ரம்சி ரசீக், வேண்டுமென்றே குற்றமிழைத்தாரா என்பது தொடர்பில் ஆராய்வதுடன், அவரின் பேஸ்புக் கணக்கை கண்காணித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இரகசியக் காவற்தறையினரருக்கு உத்தரவிட்ட நீதவான், ரம்சி ரசீக்கின் மருத்துவ அறிக்கைகளை சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் பணித்துள்ளார்.
சந்தேகநபரான சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ரசீக்கை, இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காலப் பகுதியில் தவறான தகவல்கள் மற்றும் இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா காவற்தறையினரால் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காவற்தறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார். எனினும் அந்த 17 பேரின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கொரோனா அனர்த்தத்துடன் காவற்தறையினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் கருத்துச் சுதந்திரம், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மத உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் ஸ்ரீலங்காவின் ஊடக ஸ்தாபனங்களும் வர்த்தக தொழிற்சங்கங்களும் சிவில் சமூகத்தினரும் விமர்சனம் வெளியிட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment