Thursday, May 7, 2020

பின்னால் வருந்துவதற்குரிய வேலைகளைச் செய்யாமல் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம்! ஜனாதிபதி

வெசாக் பெளர்ணமி தினத்தையொட்டி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு விடயங்களுடன் பெளத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களை வழங்கியுள்ளார்.

முகநூல் பக்கத்தில் உள்ள பதிவு:

இந்த புனித வெசாக் நோன்மதி நாளில் - இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் நோய்நொடியில்லா வாழ்வும் ஆன்மீக உயர்வும் வேண்டி என நான் பிரார்த்திக்கின்றேன்!

உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் பௌத்தர்களும் பௌத்த சமயத்தின் அதி உன்னத சமய விழாவான வெசாக் பண்டிகையை மிகுந்த சமயப் பற்றுடன் கொண்டாடுகின்றனர்.

எமது நாட்டில் பௌத்த சமயத்தவர்கள் பண்டைய காலம் முதல் புத்த பெருமான் மீதான பக்தியுடன் புண்ணிய கிரியைகளில் ஈடுபட்டு வெசாக் பண்டிகைக் காலத்தை கழிக்கும் வழமை இருந்து வருகின்றது.

முழு மனித சமூகத்தையும் நோய்த்தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையிலேயே உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களை போன்று நாமும் இம்முறை வெசாக் பண்டிகையின் சமய சம்பிரதாயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகைய அனர்த்தங்கள் மனித வரலாற்றில் ஏற்படுவது மிக அரிதானவையல்ல. புத்த பெருமான் உயிர் வாழ்ந்த காலத்தில் தம்பதிவை விஷாலா நகரம் முப்பெரும் அச்ச சூழ்நிலைகளுக்கு உட்பட்டிருந்தது. புத்த பெருமானின் போதனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பிரித் பாராயணத்தின் மூலம் அவ்வனர்த்தம் முடிவுக்கு வந்தது.

பௌத்த சமயம் போதிக்கும் போதனைகளைப் பின்பற்றி எமக்கும் இந்த வெசாக் காலத்தில் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

தற்போதைய நிலையில் அரச வெசாக் பண்டிகையை இலத்திரனியல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நடத்துவதற்கு மகாசங்கத்தினரின் வழிகாட்டலும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே வீடுகளில் இருந்து புத்த பெருமான் மீதான பக்தியுணர்வுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட எமக்கு முடியும்.

'தஞ்ச கம்மன் கதன் சாது – யன் கத்வா நானுதபப்தி
யஸ்ஸ பதீதோ சுமனோ – விபாகங் படிசெவதி'

'தீய காரியங்களைச் செய்தவர், தாம் செய்த கர்மங்களுக்காக ஏங்குகிறார்கள். அதன் பயனைக் கண்ணீர் ததும்பும் முகத்துடன் அழுதுகொண்டே அனுபவிக்கிறார்கள். நல்ல காரியங்களைச் செய்தவர், தாம் செய்த நல்ல காரியத்திற்காக ஏங்கித் தவிப்பதில்லை அதன் பயனை இன்பமாகவும் உவகையுடனும் அனுபவிக்கிறார்கள்.' என தம்மபதத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வெசாக் காலத்தில் புத்த பெருமான் போதித்தபடி, பின்னால் வருந்துவதற்கு காரணமாக அமைகின்ற விடயங்களைச் செய்யாது எமது முன்னோக்கிய பயணத்தைச் சிறந்ததாக அமைத்துக்கொள்ள முடியும்.

இந்த அனர்த்த சூழ்நிலையில் புத்தபெருமானின் போதனைகளை நடைமுறைப்படுத்தியும் கொரோனா தடுப்பு அறிவுறைகளைப் பின்பற்றியும் நாட்டையும் மக்களையும் குணப்படுத்துவதற்கு உறுதிகொள்வோம்.

இந்த முறை வெசாக் பண்டிகை இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும். காரணமாக அமையட்டும் என பிரார்த்திக்கின்றேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com