தூய கரங்கள் தூய எண்ணம் வக்கீலின் வினோத மோசடி ... ஏழை குடும்பத்திடம் கைவரிசை!!
நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் , அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி அந்நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் பெற்று சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்துள்ளார்.
யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்.மாவட்டத்தில் உள்ள நீதவான் நீதிமன்றிங்களில் ஒன்றின் நியாயதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுகுற்றம் ஒன்றினை புரிந்தார் என கூலி தொழிலாளி ஒருவர் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் , அந்நபரை 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதித்து வழக்கினை ஒத்திவைத்தார்.
அதனை அடுத்து அவரது பிணை நடவடிக்கைகள் முடிவடைந்து மன்றினை விட்டு அந்நபர் வெளியேறிய போது , அவரை மறித்த சட்டத்தரணி ஒருவர் "50 ஆயிரம் பிணையில் தானே விட்டது. அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் " என கூறி அவரிடமிருந்து 50 ஆயிரம் பணத்தினை மோசடியாக பெற்றுள்ளார்.
50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை அல்லது சொந்த பிணை என்பது அந்நபர் தனது தேசிய அடையாள அட்டை பிரதியை வழங்கி கையொப்பம் இட்டு பிணையில் செல்ல முடியும். அதற்காக மன்றுக்கு 50 ஆயிரம் செலுத்துவதில்லை. இந்நிலையிலையே மன்றுக்கு காசு செலுத்த வேண்டும் என கூலி தொழிலாளியிடம் மோசடியாக பணத்தினை பெற்று குறித்த சட்டத்தரணி மோசடி புரிந்துள்ளார்.
அதேவேளை யாழில் பொலிசாருடன் தொடர்பினை பேணும் சில சட்டத்தரணிகள் பொலிசார் ஊடாக வழக்குகளை பெறும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து செல்வதாகவும் அது சட்டத்தரணிகளின் அறத்தை மீறிய செயல் எனவும் சக சட்டத்தரணிகள் கவலை தெரிவித்தனர். அத்துடன் சில சட்டத்தரணிகளின் இத்தகைய விரும்பத்தகாத செயல்கள் தொடர்பில் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கங்கள் தொடர்ந்து மௌனம் காப்பதும் , அவ்வாறானவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருப்பது தொடர்பிலும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள வினோதம் யாதெனில் இவ்வாறான சட்டத்தரணிகள் தமிழ் தேசியம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு அரசியலிலும் செல்வாக்கு செலுத்துவதாகும்.
0 comments :
Post a Comment