Thursday, May 7, 2020

கிளிநொச்சி மாவட்டம் ஆபத்தற்ற மாவட்டமாக காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து கிளிநொச்சி மாவட்டமானது விடுபட்ட நிலையில் அதாவது ஆபத்தற்ற நிலையில் தற்போது காணப்படுகின்றது.

அதே வேளை மக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் உரிய திணைக்களங்கள் பொலிஸ் திணைக்களங்களினூடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சமூக இடைவெளியைப் பேணவும் முகக் கவசங்களை அணிந்துகொண்டும் செயற்படவும் பல இடங்களில் சுகாதார நடவடிக்கைக்காக கடைத்தொகுதிகள் வங்கிகள் அலுவலகங்கள் போன்ற இடங்களில் கைகளைக் கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூ.கேதீஸ்வரன் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட சமுர்;த்தி கொடுப்பனவு பெறுவோர் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவில் காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கான கொடுப்பனவுகள் இம்மாதத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முதியோருக்கான விசேட தேவையுடையோருக்கான மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளும் காத்திருப்போர் பட்டியலையும் உள்ளடக்கி வழங்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

ஓய்வூதியத்தைப் பெறுகின்றவர்களுக்கான கொடுப்பனவுகளை வெசாக்கை முன்னிட்டு வருகின்ற விடுமுறை காரணமாக இவ்வாரத்தினுள் வழங்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் படியாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அரசாங்க அதிபர்
மாவட்டத்தின் உணவு பாதுகாப்பை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை சிறுபோகத்தில் 14 வகையான பயிர்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

அரசாங்கத்தினால் அதற்கான அளவீடுகள் தரப்பட்டுள்ளன. அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில்; மிளகாய்ச் செய்கை 200 ஹெக்ரெயரிலும் சிவப்பு வெங்காயம் 150 ஹெக்ரெயரிலும் பெரிய வெங்காயம் 15 ஹெக்ரெயரிலும் சோளன் 50 ஹெக்ரெயரிலும் உழுந்து 24 ஹெக்ரெயரிலும் கௌப்பி 150 ஹெக்ரெயரிலும்; பயறு 350 ஹெக்ரெயரிலும்; செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்; குறிப்பிட்டார்.
மேலும் தற்போது சிறுபோகத்திற்கான நெல் பயிர்ச்செய்கையானது 8812 ஏக்கர் அளவில் மாவட்டத்திலுள்ள 8 பாரிய குளங்களினாலும் சிறு குளங்களினூடாகவும் இப் பயிர்ச்செய்கையானது நடைபெற்று வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் சௌபாக்கியா வேலைத்திட்டங்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்ற இச் செயற்பாடுகளின் பொருட்டு விவசாயிகளுக்கான ஊக்குவிப்பாக மானிய அடிப்படையில் அவர்களுக்கான விதை பொருட்களை வழங்குவதற்கான செயற்பாடுகள் இதனூடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனடிப்படையில் அவற்றைப் பெறுவதற்கான தகுதியுடைய பயிர்களாக சோளம் மிளகாய் பயறு கௌபி உழுந்து சோயாபீன் பெரிய வெங்காயம் சிறிய வெங்காயம் எள்ளு உருளைக்கிழங்கு நிலக்கடலை குரக்கன் கொள்ளு மஞ்சள் இஞ்சி மற்றும் உள்ளி போன்ற பயிர்களை பயிரிடுபவர்களுக்கான மானியத்திட்டமும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com