லஞ்சம் பெற்று விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் வீட்டினுள் கோடீஸ்வரனுக்கு நள்ளிரவில் என்ன வேலை?
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் லவநாதன் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் கொந்தராத்துக்காக லஞ்சம்பெற்றபோது கையும் மெய்யுமாக பிடிபட்டு எதிர்வரும் 10 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள உதயகுமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாண்டிருப்பிலுள்ள உதயகுமாரின் வீட்டிற்கு சென்றமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கோடீஸ்வரன் மேற்படி குற்றவாளிகளுடன் என்ன தொடர்பினை வைத்திருந்தார்? இக்கைது நடவடிக்கைக்கும் கோடீஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொள்கின்றாரா என்ற பல கேள்விகளை மக்கள் எழுப்பியுள்ளனர்.
இரண்டு 'முதலை'களும் சிக்கியது எப்படி?
வீதி நிர்மாண கொந்தராத்துக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது இன்று கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரையும், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
வீதி நிர்மாண கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து 03 லட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். உதயகுமார் மற்றும் பிரதேச செயலாளர் கே. லவநாதன் ஆகியோரை, கொழும்பிலிருந்து வந்த – லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை, பிரதேச செயலகத்தில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டது.
பின்னர் இரவு 7.00 மணியளவில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இவர்கள் இருவரும் ஆஜர் செய்யப்பட்டபோது, ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா உத்தரவிட்டார்.
என்ன நடந்தது?
அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'சப்ரிகம' அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மூன்று வீதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமொன்றினை அந்தப் பகுதியைச் சேர்ந்த கொந்தராத்துக்காரர் ஒருவர் பெற்றுள்ளார்.
குறித்த வீதிகள் ஒவ்வொன்றினையும் நிர்மாணிக்கும் பொருட்டு, தலா 20 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி நிர்மாணத்தை அமுலாக்கும் பொறுப்பு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்படி ஒப்பந்தகாரர் பெற்றுள்ள ஒவ்வொரு வீதிக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வீதம் 03 லட்சம் ரூபாவை லஞ்சமாக வழங்க வேண்டுமென ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கோரியுள்ளார்.
மேலும், பணம் கிடைக்கும் வரை, அந்த வீதி நிர்மாண வேலையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு வழங்காமல் பிரதேச செயலாளர் இழுத்தடித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியிலேயே தன்னிடம் பிரதேச செயலாளர் லஞ்சம் கோரும் விடயத்தை, குறித்த கொந்தராத்துக்காரர் – கொழும்பிலுள்ள லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
எப்படி சிக்கினர்?
பிரதேச செயலாளர் லஞ்சம் வாங்கும் போது – அவரை கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவைச் சேர்ந்த 06 பேர் அம்பாறை மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் – தாம் கொண்டுவந்திருந்த 03 லட்சம் ரூபா பணத்தை, மேற்படி கொந்தராத்துக்காரரிடம் கொடுத்த லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், அதனை பிரதேச செயலாளர் லவநாதனுக்கு வழங்குமாறு கூறியுள்ளனர்.
ஆனாலும் பிரதேச செயலாளர் லவநாதன் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல், அதனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதய குமாரிடம் வழங்குமாறு, கொந்தராத்துக்காரருக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.
இதற்கிணங்க, பிரதேச செயலகத்துக்கு மேற்படி கொந்தராத்துக்காரர் சென்று, உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடம் பணத்தை கொடுத்துள்ளார். சாதாரண நபர்போல் ஆடையணிந்த லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும் குறித்த கொந்தராத்துக்காரருடன் சென்றிருந்தார்கள்.
இதன்போது மூன்று லட்சம் ரூபா பணத்தையும் மேற்படி கொந்தராத்துக்காரரிடம் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதயகுமார் பெற்றபோது, அவரை லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கையும் மெய்யுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இதன் பின்னர், பிரதேச செயலாளர் லவநாதனும் கைது செய்யப்பட்டார்.
மேற்படி தகவல்கள் அனைத்தையும் லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் – செய்தித்தாள் ஒன்றுக்கு உறுதிப்படுத்தினார்.
0 comments :
Post a Comment