Sunday, May 17, 2020

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகரின் கடை உரிமம் 15ம் திகதியிலிருந்து 10நாட்களிற்கு இரத்து செய்த கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர் ஒருவர் கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்கறி பொருட்களை பிரதேச சபையின் பிரதான வாயிலில் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த செயற்பாடு தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வர்த்தகர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறான நிலையில் கடந்த 15ம் திகதி முதல் 10 நாட்களிற்கு குறித்த வர்த்தகரிற்கான வியாபார உரிமத்தை இரத்து செய்வதாக குறிப்பிட்டு கரைச்சி பிரதேச சபையினால் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மாற்றுத்திறனாளியான குறித்த வர்த்தகர் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்திடம் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்த கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகள் மற்றும் தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன் வைத்தனர். கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கும் பாதிக்கப்பட்ட தமது அங்கத்தவரான வர்த்தகரிற்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாட்டை அடிப்படையாகக்கொண்டு அவரை பழிவாங்கும் நோக்குடன் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமது சங்க கட்டடத்திற்கு வருகைதரும் வீதியின் சிறு பகுதியை திருத்தம் செய்து தருமாறு பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை அபிவிருத்தி செய்து தருவதிலும் தவிசாளர் இதயசுத்தியுடன் செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கம் அவரது செயற்பாடுகள் அனைத்தும் பழிவாங்கும் செயற்பாடுகளாகவே அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தனிப்பட்ட பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டே எமது அங்கத்தவர் மீது பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்ட தமது அங்கத்தவரான குறித்த வர்த்தகரிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மீளப்பெற்று அவர் சுதந்திரமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேசமும் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவரும் நிலையில் கரைச்சி பிரதேச சபை ஆளுகையில் உள்ள கிளிநொச்சி சேவைச் சந்தையில் காலை இழந்த இந்த வர்த்தகரை மழை வெள்ளம் புரண்டோடும் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட குரோதங்களிற்காக பழிவாங்கும் செயற்பாடாகவே நாங்கள் அதை பார்க்கின்றோம். குறித்த வர்த்தகருடன் வெளியில் தற்காலிக கொட்டகையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மரக்கறி வியாபாரிகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை நிரந்தர கட்டடத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன் னெடுக்க உள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஊடக சந்திப்பின்போது வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com