கொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் – WHO
உலகலாவிய ரீதியில் கொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, தென்னாசியா மற்றும் ஆபிரிக்கா போன்ற போன்ற நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 55 இலட்சத்து 87 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 28 இலட்சத்து 73 ஆயிரத்து 655 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் 53 ஆயிரத்து 167 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 23 இலட்சத்து 65 ஆயிரத்து 645 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்து 47 ஆயிரத்து 861 பலியாகியுள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவில் கடந்த 2 மாதங்களுக்கு பின்னர் தற்போது கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்த நாட்டில் 17 இலட்சத்து 6 ஆயிரத்து 226 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் இதுவரை 99 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மார்ச் 29 ஆம் திகதி அமெரிக்காவில் கொரோனாவால் 497 பேர் பலியாகினர்.
அதன் பின்னர் அங்கு தினமும் பலியாவோர் எண்ணிக்கை ஆயிரம் முதல் 2 ஆயிரம் என்ற கணக்கில் இருந்தது.
ஆனால், நேற்று (25) அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 505 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த இரண்டு மாதங்களில் பதிவான ஒரு நாள் கணக்கின் மிகக்குறைவான பலி எண்ணிக்கையாகும்.
இந்த விபரங்களின் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரசின் வீரியம் படிப்படியாக குறைந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, சீனாவில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 40 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் கொரோனாவின் மையமாக விளங்கிய வுகானை சேர்ந்தவர்கள் என சீன சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வுகானில் கடந்த 10 தினங்களில் 60 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ள 51 பேரில் 11 பேர் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேரில் 38 பேர் உகான் மாகாணத்தை சேர்ந்தவர்கள்.
0 comments :
Post a Comment