நாட்டின் பல பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய நுவரெலியா இரத்தினபுரி கேகாலை களுத்துறை காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வட கிழக்காக நாட்டைவிட்டு நகர்ந்துசெல்வதுடன் பிற்பகலில் பங்களாதேஷின் மேற்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூறாவளியின் தாக்கம் காரணமாக கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் பத்மப்பிரிய திசேரா தெரிவித்துள்ளார்.
களு கிங் மற்றும் நில்வளா கங்கைளின் நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை களு கங்கையின் நீர்மட்டம் 8.05 மீற்றராக பதிவாகியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென் மேல் சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிடுகின்றார்.
இன்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் இருந்து தவிர்த்திருக்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் கடுங்காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதுடன் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இதனிடையே பலத்த மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
மாத்தளை இரத்தினபுரி களுத்துறை கேகாலை நுவரெலியா மற்றும் கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம இரத்தினபுரி எலபாத கலவான கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக இந்த பகுதிகளில் வாழ்வோரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.
அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இடர் முகாமைத்து நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment