Saturday, April 25, 2020

வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள்

வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி பூரணமாக முடக்கப்பட்டுள்ள தாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மேலும் 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தியுள்ளதாகவும், நாளை முதல் நாளொன்றுக்கு 400 பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்கனவே உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் அடையவோ, கவலையடையவோ வேண்டாம் எனவும் கடற்படைத் தளபதி கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய கடற்படை வீரர்களிடம் கவனம் செலுத்தல், விடுமுறையில் சென்றிருந்தவர்களை மீள அழைத்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை கடற்படை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் (194 திருமணமான குடியிருப்புகள்) வெலிசர கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com