Thursday, April 16, 2020

முகக்கவசம் கட்டாயம்! மீறுபவர்களுக்கு என்ன நடக்கும்? விளக்குகிறார் பொலிஸ் பேச்சாளர்.

இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தற்சமயம் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். அமுலுக் வரும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
இதேவேளை முக கவசத்தை அணியாமல் வருவோர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் பாதசாரிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com