கொரோணாவின் பின் ஒழிந்து நின்று ஜனநாயகத்தை வலுவிழக்க செய்யாதீர்! தேசிய மக்கள் சக்தி..
உலகத்தினை கொவிட் 19 ஸ்தம்பிதம் அடையவைத்துள்ளது. இந்நிலைமை இலங்கையின் சமூக, உட்கட்டமைப்பு , பொருளாதாரம் நிலைகளை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை விளக்கும் மக்கள் சக்தி அரசாங்கம் கொரோணவிற்கு மேற்கொள்ளும் உதவிகளின் பின் ஒழிந்து நின்று நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்க செய்கின்றது எனச்சாடுகின்றது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவை தோற்கடிக்கும் போராட்டம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை வலுவிழக்க செய்யும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்போம்.
இந்த வேளையில் நாம் அனைவரும் நாடென்ற வகையில், தேசத்தவர்களாக எமது முதன்மை கவனம் COVID 19 வைரஸை தோற்கடிப்பதற்காக செலுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்கொல்லி வைரஸை தோற்கடித்தல் எமது முதன்மையான விடயம் என்பதனால், இதற்கு முன்னரும் குறிப்பிட்டது போன்று தேசிய மக்கள் சக்தி கொரோனாவை தோற்கடிக்கும் போராட்டத்துக்கு தனது உயர்ந்தபட்ச பங்களிப்பை வழங்கி வருகிறது. கொரோனாவை தோற்கடிக்கும் போராட்டத்தில் இணைந்துள்ள சுகாதார துறையினர் உள்ளிட்ட அனைவரதும் அர்ப்பணிப்பான பங்களிப்பு காரணமாக இந்த பேரழிவு நிலையை விரைவாக தோற்கடிக்கலாம் என நம்புகிறோம்.
COVID 19 வைரஸை தோற்கடிப்பதற்காக பங்களிப்பு செய்வதுடன், எம் முன்னால் தோன்றிவரும் நாட்டுக்கும், மக்களுக்கும் தாக்கம் ஏற்படுத்தும் பல சவால்கள் தொடர்பில் இந்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என கருதுகிறோம்.
01. COVID 19 வைரஸின் தாக்கமும், அந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் காரணமாக உணவு உள்ளிட்ட உற்பத்தி மற்றும் சேவை துறை உலகளாவிய ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. அது உலக பொருளாதார நெருக்கடிக்கு வழி சமைக்கும்.
இலங்கையும் நாடென்ற வகையில் இந்த சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே கடன் பொறியில் சிக்கி, கடன் தவணை செலுத்த முடியாதளவு பாரிய நெருக்கடி நிலையிலேயே இலங்கை பொருளாதாரம் இருந்தது. கொரோனா காரணமாக அந்த நிலை மேலும் மோசமடையும். தற்போது இலங்கையின் விவசாய உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்தமை காரணமாகவும், இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு (பெருந்தோட்ட பயிர் உள்ளிட்ட) இந்த நிலை ஏற்படுத்தியுள்ள பாதகமான தாக்கம் காரணமாகவும் எதிர்காலத்தில் இலங்கையும் உணவு பற்றாக்குறைக்கும், பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே இலங்கை ரூபாயின் அமெரிக்க டொலருக்கான பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் உலக சந்தையில் மசகு எண்ணை விலை வீழ்ச்சியடைந்த நிலையில் மசகு எண்ணை கொள்வனவுக்காக செலவாகும் டொலர்களின் அளவு குறைவடைந்த மற்றும் இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்தும், உலக வங்கியிடமிருந்தும் உதவி கிடைத்துள்ள நிலையில் கூட இப்போது 1 அமெரிக்க டொலருக்காக 200 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
மறுபுறமாக இலங்கையின் பிரதான ஆடை தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல தனியார் துறை நிறுவனங்கள் தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை குறைப்பதற்கும், சில நிறுவனங்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளன. அதன் காரணமாக நாட்டில் தொழிலின்மை பிரச்சினை ஏற்படுவதுடன், மக்களின் வருமானமும் இழக்கப்படும். விவசாயம் மற்றும் பெருந்தோட்ட துறையிலும் மக்களின் வருமானமும் இழக்கப்படும். விவசாயம் மற்றும் பெருந்தோட்ட துறையிலும் உற்பத்தி வீழ்ச்சியடைதல் மற்றும் வருமானம் குறைவடையும் நெருக்கடி உள்ளது.
இந்த பாரதூரமான பொருளாதார நெருக்கடி தொடர்பிலும், அதனை கட்டுப்படுத்துவதற்கும் இப்போதே மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்கம் இதுவரை போதுமானளவு கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. எனவே வரவுள்ள தேர்தலை மட்டும் சிந்திப்பதற்கு பதிலாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி தொடர்பிலும் அரசாங்கம் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என கருதுகிறோம்.
02. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளையிலேயே இலங்கை COVID 19 வைரஸை தோற்கடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய 2020 ஆகஸ்ட் வரை இயங்கக்கூடிய நிலை இருந்த பாராளுமன்றம், உயிர்கொல்லி வைரஸ் இலங்கையிலும் பரவும் ஆபத்து இருந்த நிலையில் மார்ச் 02 திகதி ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது. விரைவாக தேர்தலை நடத்துவது பற்றியே சிந்தித்தார்கள். தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு அமையவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அது தொடர்பான நெருக்கடி தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்னர், அதாவது ஜூன் 02 திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதன்படி அதற்கு முன்னர், அதாவது மே மாத இறுதியில் தேர்தலை நடத்த வேண்டும். கொரோனா ஆபத்து தொடரும் நிலையில் தேர்தலை நடத்துவது ஆபத்தானதாகும். மே மாத இறுதியில் தேர்தலை நடத்த முடியாது என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்தாகும்.
இந்த நிலை தொடர்பில் மே மாத இறுதியில் தேர்தலை நடத்துவது சிரமமானது என்பதனால், அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்த நிலையில், அதனை கருத்திலெடுக்காத, கடுமையான பதிலே ஜனாதிபதி தரப்பிலிருந்து கிடைத்துள்ளது. அரசாங்கம் மே மாத இறுதியில் எப்படியாவது தேர்தலை தேர்தலை நடத்த எண்ணுவது தெளிவாகிறது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது உண்மைதான். இருப்பினும், நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் மே மாத இறுதியில் தேர்தலை நடத்தினால் மக்கள் ஒன்றுகூடும் வாய்ப்புகள் அதிகரிப்பதன் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட வைரஸ் பரவல் மீண்டும் பரவும் நிலை ஏற்படலாம். அத்துடன், அதனை தடுப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுதல் வரையறுக்கப்பட்டால், அது நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தும்.
தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருமமாகும் என ஜனாதிபதி செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அது உண்மையே. தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாக இருந்த போதிலும், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்தக்கூடிய சூழலை உருவாக்கி, உறுதிப்படுத்துதல் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பொறுப்பாகும். மே மாத முதல் வாரம் இலங்கையில் கொரோனா பரவும் உச்சக்கட்டம் என அரச மருத்துவ அலுவலர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போது கம்பஹா மாவட்டம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. நாளாந்தம் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். நிலமை அவ்வாறு இருக்கையில் மே மாதம் தேர்தலை நடத்த எண்ணுவது மக்கள் பாதுகாப்பை கருத்திலெடுக்காத, தமது அதிகாரத்தை மட்டுமே சிந்திக்கும் ஆட்சியாளர்களே ஆவர். அதன் காரணமாகவே இந்த பிரச்சினையை பாரதூரமாக கருத வேண்டியுள்ளது.
பெருமளவு அரச ஊடகங்கள் உள்ளிட்ட இலத்தினியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஆற்றல் அரசாங்கத்துக்கு இருந்தாலும், எதிர்க்கட்சிகளுக்கு இருக்காது. எனவே நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக எதிர்க்கட்சிகளுக்கு நியாயமான காலம் வழங்கப்படாமல், சந்தேகம் பயமின்றி வாக்கு சாவடிக்கு வாக்காளர் செல்லக்கூடிய நம்பிக்கையான சூழல் உருவாகாத நிலையில் தேர்தலை நடத்தினால் அது நியாயமான தேர்தலாக இருக்காது. ஆகவே எந்த திகதியில் தேர்தல் நடத்தப்பட்டாலும், அது அனைவரும் கருத்து தெரிவிக்கக்கூடிய நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்தக்கூடிய சூழலில் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். அவ்வாறான சூழலை உருவாக்கி, தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தெரிவிக்கிறோம்.
03. விசேட நிலை என்பதனால் COVID 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் போது சில சட்டதிட்டங்கள் வரையறுக்கப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு சமூகத்தையும், அனைத்து மக்களையும் இணைத்து கொள்வதற்கு பதிலாக ஜனாதிபதி தனக்கு கீழ்ப்படியும் நபர்களை மட்டும் சேர்க்க நடவடிக்கை எடுப்பதும், அந்த வேளையில் பாராளுமன்றம் செயலிழந்து இருப்பதும், சில குறிப்பிடத்தக்க சட்டங்கள் வேண்டுமென்றே உதாசீனப்படுத்துதலும் காரணமாக ஜனநாயக கட்டமைப்புக்குள் செயற்படுவதற்கு பதிலாக தனிநபர் ஆட்சி தொடர்பான ஆசையை காட்டுகிறது. அனைத்து ஊடகங்களையும் பாவித்து பொது மக்களிடம் இந்த செயற்பாட்டை அங்கீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பது பாரதூரமானதாகும்.
ஜனநாயகத்துக்கு சவால் விடுத்து, ஒரு தனிநபரை சூழவுள்ள குழுவின் ஆட்சியை நியாயப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஜனநாயத்துக்கு அச்சுறுத்தலாகும் என்பதுடன், எதிர்கால சர்வாதிகார ஆட்சிக்கான ஒத்திகையாகவும் அமையலாம். அத்துடன் முழு நாடும் இன, மத பேதமின்றி ஒன்றிணைந்து இந்த கொரோனா வைரஸை தோற்கடிக்க வேண்டியுள்ள வேளையில் அரசாங்கத்தின் பல்வேறு குழுக்கள் மற்றும் சில ஊடகங்கள் இந்த அனர்த்த வேளையில் கூட இனவாதத்தை தூண்டுவதனை காணலாம். குறிப்பாக நோயாளிகள் அடையாளம் காணப்படும் போது முஸ்லிம் நோயாளிகள் தனியாக பெயர் குறிப்பிடப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தை சமூகத்தில் உருவாக்க முயற்சிப்பது கவலைக்குரியதாகும். சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து வெளியிடுவோருக்கு எதிராக சட்டதை அமுல்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் அக்கறையும், அவசரமும் இவ்வாறான இனவாத கருத்துக்களை பரப்புவதனை தடுப்பதில் இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பரப்பப்படும் இவ்வாறான போலி பிரச்சாரங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தும், அது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாகவே இனவாத, மதவாதத்தை முன்னிநிலைப்படுத்திய சர்வாதிகார ஆட்சிக்கு வழிசமைக்கும் என நாம் கூறுகிறோம்.
எனவே, COVID 19 வைரஸை தோற்கடிக்க அனைவரும் இணைந்து போராடுவதுடன், ஏற்படக்கூடிய ஜனநாயக விரோத போக்கின் ஆபத்தை அடையாளம் காண்பதும், ஆரம்பத்திலேயே அதனை தோற்கடிப்பதற்காக போராடுவதும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரதும் பொறுப்பாகும் என தெரிவிப்பதுடன், தேசிய மக்கள் சக்தி ஜனநாயகத்தை பாதூகப்பதற்காக ஆற்றக்கூடிய அனைத்து அர்ப்பணிப்புகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தி
2020.04.14
0 comments :
Post a Comment