கொரோனா வைரஸிலும் மத துவேஷத்தை பரப்பும் இந்துத்துவ சங்பரிவார்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவீர்!
தமிழக முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி வலியுறுத்தல் !
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருவதையடுத்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு நன்றி பாராட்டியும், இது விஷயத்தில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து கோரிக்கை மற்றும் ஆலோசனைகள் அடங்கிய மனு ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி , தமிழக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி க்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த மனுவில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு :
1. வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டிய இந்த சூழலில் கொரோனாவை விட வேகமாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மத துவேஷ கருத்துக்களைப் பரப்பி வரும் இந்துத்துவ சங்பரிவார அமைப்பைச் சார்ந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அத்துடன் பயோ ஜிகாத், கொரோனா ஜிகாத் என்று வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வரும் அச்சு, காட்சி ஊடகங்கங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
2. தமிழகத்தில் நடைபெற்று வரும் இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்களுக்கு அரசின் அணுகுமுறையும் ஒரு காரணமாக இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என மீண்டும் மீண்டும் அழுத்தமாக கூறி வருவது மக்கள் மத்தியில் இத்தகைய அவதூறு பிரச்சாரங்கள் வேகமாகப் பரவிட காரணமாக அமைந்து விட்டது. இத்தகைய தவறான அணுகுமுறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
3. இதுபோன்ற நோய்த்தொற்றும் இதனைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் மக்களுக்கு புதுமையானது என்பதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
4. நோய்த்தொற்று காரணமாக பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சிகிச்சை, கனிவான உபசரிப்பு மற்றும் அனைத்து வசதிகளும் சுகாதாரமான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சந்தேகத்தையும், அச்சத்தையும் போக்கும் வகையில் பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் அதிகாரிகள் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்.
6. நோய்த்தொற்று பாதித்த மக்களின் வீடுகள் மற்றும் அப்பகுதியிலுள்ள மக்களை தனிமைப்படுத்தும் பொழுது அடக்குமுறையை கையாலாமல் அறிவுறுத்தல்கள் மூலமாக மக்களை தயார் படுத்த வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
7. நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக நலன் தமிழக மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுவதோடு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
8. அதிகரித்து வரும் நோய்த்தொற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
9. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வீடு திரும்ப முடியாமல் நெருக்கடிகளை அனுபவித்து வரும் தமிழக மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
10. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் அரசிற்கு துணைநிற்கும் என்றும் இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை பாப்புலர் ஃப்ரண்ட் தயார் செய்து வைத்திருக்கிறது எனவும் அவர் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படிக்கு
ஆ.நாகூர் மீரான் – மாநில செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
0 comments :
Post a Comment