Tuesday, April 7, 2020

கப்பலில் வந்த இலங்கையரை மீட்டெடுக்க உதவினார் ஜனாதிபதி கோத்தா!

'கப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்!' என்ற தலைப்பில் இலங்கைநெற்றும் ஏற்கனவே செய்தி வௌியிட்டிருந்து. அந்தச் செய்தி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் பார்வைக்குச் சென்றிருக்கின்றது. அந்தச் செய்தியைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள், உடனடியாக அந்த இளைஞனை கொழும்புத் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு உள்வாங்குமாறு கோரியுள்ளார்.

அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவுசெய்திருக்கின்றார்.

'உலகின் எந்தவொரு நாட்டினாலும் பொறுப்பேற்கப்படாத கப்பலில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை இளைஞரை எனது பணிப்புரையின் கீழ் இலங்கை கடற் படையினர் அந்த கப்பலிலிருந்த நாட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர்.

மேற்படி எம்.எஸ்.சீ. மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் பயணிகள் மற்றும் பணிக் குழாமினர் உட்பட 2700 பேர் உள்ளனர்.

ஜனவரி 05ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் உலகெங்கும் பரவிவரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் தனது சுற்றுலா பயணத்தை நிறுத்தியது.

உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மேற்படி கப்பலைப் பொறுப்பேற்க எந்தவொரு துறைமுகமும் முன்வரவில்லை.

இதன் காரணமாக இத்தாலி நோக்கிப் பயணமான கப்பல் எரிபொருள் மற்றும் வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது.

இந்த கப்பலில் சேவை செய்த ஒரேயொரு இலங்கையரான அநுர பண்டார ஹேரத் இத்தாலிக்கு கப்பல் செல்ல முன்னர் தன்னை இலங்கை கடலில் வைத்து நாட்டுக்குள் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு தனது முகநூலின் ஊடாக நேற்றுமுன்தினம், 5ஆம் திகதி, கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

அந்த கோரிக்கை எனது பார்வைக்குக் கிடைத்தவுடன் - கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவிடம் இந்த இளைஞரைப் பொறுப்பேற்று நாட்டுக்குள் அழைத்து வருகுமாறு அறிவுறுத்தினேன்.

அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் செயற்பட்ட எமது கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு துறைக்கான அவசர பிரிவு, நேற்றைய தினம் அதிகாலை - கொழும்பு துறைமுகத்திலிருந்து 9 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கடற் பிரதேசத்தில் வைத்து, அநுர பண்டாரவைத் தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தது.

75 வயதான ஜெர்மன் நாட்டு பெண் ஒருவரையும் சிகிச்சைக்காக அழைத்துவரவும் கடற்படையின் அவசர பிரிவு உதவி வழங்கியது.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட அநுர பண்டாரவை பூசா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும், ஜெர்மன் நாட்டவரை கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கும் உடனடியாக அனுப்பி வைக்க நடஙடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.'

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com