பேரழிவுமிக்க கொரொனா வைரஸ் முடக்கத்திற்கு மத்தியிலும் நம்பிக்கையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களை மோடி அரசாங்கம் நசுக்குகிறது
By. Wasantha Rupasinghe and Keith Jones
இந்திய அரசாங்கத்தின் தவறான மற்றும் சமூக பொறுப்பற்ற 21-நாள் தேசியளவிலான கொரொனா வைரஸ் முடக்கத்திற்குள் சிக்கித் தவிக்கும் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புகைப்படங்களைக் கண்டு இந்தியாவிலும் உலகெங்கிலுமுள்ள மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமலும், கவனமான முன்னேற்பாடுகள் எதையும் செய்யாமலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 அன்று மாலை, நாட்டின் 1.37 பில்லியன் மக்களும் ஒரு சில தெளிவாக வரையறுக்கப்படாத விதிவிலக்குகளுடன் நள்ளிரவு தொடங்கி அடுத்த மூன்று வார காலத்திற்கு அவர்களது வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று அறிவித்ததன் விளைவு விரைவில் மிகவும் தெளிவாகத் தெரியவந்தது.
இந்நிலையில், இந்தியாவின் கிராமங்களும் மற்றும் நகர்ப்புற குடிசை பகுதிகளும் முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை எப்படி பெற முடியும் என்பது பற்றி மோடி விளக்கமளிக்கவில்லை. ஜீவனத்திற்கான ஊதியங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு வழமையாக ஒழுங்கமைக்கப்படாத “முறைசாரா துறைகளில்” பணிபுரியும் இந்தியாவின் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்று வாரங்களுக்கு வேலை இல்லை என்றால், ஊதியமும் இல்லை என்ற நிலையில் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் எப்படி வாங்கிக் கொள்ள முடியும் என்பது பற்றியும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
மார்ச் 26 இல் தான் ஒரு மிகச்சிறிய நிவாரண தொகுப்பை வழங்குவதற்கு அரசாங்கம் அக்கறை எடுத்துக் கொண்டது. இது, பெரும்பாலும் இப்போதிருந்து வாரங்கள் மற்றும் பல மாதங்களுக்கு வழங்கப்படுவதற்கு உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உணவுப்பொருட்களின் விபரம் அடங்கிய கையேடுகளைக் கொண்டிருந்தது, மற்றும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகளில், அல்லது வறுமை ஒழிப்பு திட்டங்களின் மூலமாக வழங்கப்படும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்ட தினக்கூலியில் சிறு அதிகரிப்பை ஏற்படுத்தியிருந்தது. பாரதீய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகளின் அலட்சியமிக்க மற்றும் மோசடியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மொத்த தொகையை அதிகரித்துக் காட்டும் நோக்கத்தில், மாநில அரசாங்கங்கள் மேற்கொண்ட செலவினங்களைக் கூட மத்திய அரசாங்கம் தனக்கு சம்பந்தமில்லை என்றாலும் தன்னிச்சையாக தனது செலவில் உள்ளடக்கிக் கொண்டது. எப்படியானாலும், 1.7 இலட்சம் கோடி (22.5 பில்லியன் அமெரிக்க டாலர்) தொகுப்பு நிதி வழங்கல் என்பது தனிநபர் அடிப்படையில் பார்த்தால் அது வெறும் 1,200 ரூபாய் அல்லது 16 அமெரிக்க டாலர் என்ற மிகக் குறைந்த தொகையையே குறிக்கும்.
அரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கினரின் கடுமையான மற்றும் குற்றவியல் அலட்சியம் காரணமாக தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்களான ஏழை உழைக்கும் மக்கள் நம்பிக்கையற்ற நடவடிக்கைகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
தினக்கூலி தொழிலாளர்களாக கட்டுமானம் மற்றும் ஆடை உற்பத்தி வேலைகளைச் செய்யும், மற்றும் மோடியின் ஒட்டுமொத்த ஊரடங்கு உத்தரவினால் திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலையால் இது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது தற்காலிக குடியிருப்புக்களில் இனிமேல் தொடர்ந்து குடியிருக்க முடியாது என்ற நிலையிலும், வேலை மற்றும் பணம் இல்லாமையால் பலரைப் பொறுத்தவரை தங்குமிடம் கூட இல்லாமல் அவர்களது பணியிடங்களிலேயே உறங்கி வந்தனர் என்ற நிலையிலும், மேலும் சிலர் குழந்தைகளுடனும், தில்லி, மகாராஷ்ட்ராவின் நகர்ப்புற மையங்கள், மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளை விட்டு தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மேலும், அனைத்து இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். அதிலும் சிலர் வெறும்கால்களுடன் செல்கின்றனர்.
துரதிருஷ்டவசமாக, மக்கள் இவ்வாறு செய்வதானது, கொரொனா வைரஸ் நோய்தொற்றை இந்தியாவின் நகர்ப்புற மையங்களிலிருந்து, அதன் பெரும்பான்மையான மக்கள் இன்னும் வாழ்ந்து வரும் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத கிராமப்புறங்களுக்கும் பரவச் செய்யும் அபாயம் உள்ளது.
இந்த கொடுங்கனவை உருவாக்கி, இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க அரசாங்கமும் மற்றும் மாநில அரசு எந்திரமும் அவற்றின் பொதுவான கொடூரமான மற்றும் மிருகத்தனமிக்க பாணியில் இதற்கு பதிலிறுத்துள்ளன.
சமூக பதட்டம் குறித்து அஞ்சி, 1947 ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று வகுப்புவாத பிரிவினைக்கு ஆளான பின்னர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இயக்கத்தின் பெரும் அதிகரிப்பால் நிகழ்ந்த பெரியளவிலான இடம்பெயர்வாக இது இருந்ததால், உத்திரப்பிரதேசம் மற்றும் தில்லி உட்பட பல மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்கள் அவரவர் கிராமங்களைச் சென்றடைவதற்கு பேருந்து வசதிகளை செய்து தருவதாக அறிவித்தன. ஆனால் இந்த நடவடிக்கை அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர், சில சந்தர்ப்பங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பேருந்தில் இருக்கைகளை பிடிப்பதற்கு கூட்டமாக நெருக்கித் தள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றது, இச்சூழ்நிலை, கொரொனா வைரஸ் நோய்தொற்றின் பரவலின் தொடர்ச்சியை உடைப்பதற்கு தேவையான “சமூக இடைவெளியை” திணிப்பதற்கான அதன் முன்கூட்டிய முழு அடைப்பு முக்கியமானது என்ற மோடி அரசாங்கத்தின் கூற்றை மேலும் கேலிக்கூத்தாக்குகிறது.
இந்த தோல்வியைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் ஞாயிறன்று, மக்கள் இடம்பெயர்வது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி, ஏற்கனவே பாதி வழியில் இருப்பவர்கள் மேலும் மாநிலங்களை கடக்க முடியாதவாறு மாநிலங்களின் எல்லைகளை முடக்கினர்.
இது விரைவில் பல இடங்களில் தொழிலாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையேயான மோதல்களுக்கு வழிவகுத்தது. அத்தகைய ஒரு சம்பவத்தில், குஜராத்தின் சூரத்தில் உள்ள சுமார் 500 ஆடைத் தொழிலாளர்கள் பொலிஸூடன் மோதிய சமயத்தில் அவர்களை சொந்த கிராமங்களுக்கு பயணிக்க விடாமல் தடுக்க அவர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி பொலிசார் தாக்குதல் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் வரையிலும் கூட பயணம் செய்த சில தொழிலாளர்கள் பசி மற்றும் பட்டினியில் இருந்து தப்பித்து வர வேண்டியிருந்ததால் அதிகாரிகளின் விரோதப் போக்கையும் எதிர்கொண்டதாக ஊடகங்களிடம் அவர்கள் மீண்டும் மீண்டும் வேதனையான குரலில் தெரிவித்தனர்.
தில்லிக்கு கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரமான பரேலிக்கு அவர்கள் வந்தடைந்த போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழு அங்கு நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. விரைந்து பரவிய ஒரு காணொளியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன் படி, பாதுகாப்பு சாதனங்களை அணிந்திருந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு பணியாளர்களும், புலம்பெயரும் தொழிலாளர்களை குத்துகாலிட்டு அமரும் படி வற்புறுத்தினர். அதிலும் சிலர் முதுகில் தங்களது பயணப்பொதியை சுமந்தவாறு இருந்தனர். பின்னர் அவர்கள் கறைபோக்கியாக பயன்படுத்தப்படும் மற்றும் பரேலி நகரம் அதன் பேருந்துகளை சுத்தம் செய்ய கிருமிநாசினியாக பயன்படுத்தும் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலை அவர்கள் மீது தெளித்தனர். இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்ட நகர நிர்வாகம், தேவையான தடுப்பு நடவடிக்கை என்பதாக தொடர்ந்து இதை மேற்கொண்டு வருகிறது. என்றாலும், மும்பை நகர அரசாங்கத்தின் பூச்சிக்கொல்லி அதிகாரியான டாக்டர் ராஜன் நரிங்கரேக்கர் கிருமிநாசினி தீங்கற்றது என்ற அவர்களது மோசமான கூற்றுக்களை அம்பலப்படுத்தினார். “இது அரிப்பு அல்லது எரிச்சலை விளைவிக்கக்கூடியது. மேலும் இதை மனிதர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை” என்று அவர் Indian Express செய்தியிதழுக்கு தெரிவித்தார்.
கொரொனா வைரஸ் நோய்தொற்றுக்கு மோடி அரசாங்கத்தின் பதில், இந்திய பெருவணிகத்திற்கான செயற்பாட்டாளராக அதன் பங்கைக் கொண்டுள்ளது, அதேவேளை இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் நலன்களுக்கும் அபிலாஷைகளுக்கும் முற்றிலும் அலட்சியமான மற்றும் விரோதமான பாவனையையும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட அதன் ஆறு ஆண்டு கால ஆட்சியில், தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெருக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும், மற்றும் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை இன்னும் ஆழமாக ஒருங்கிணைக்கும் அதேவேளை, மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு இது தலைமை தாங்கியது.
மார்ச் 24 நள்ளிரவு முதல் தேசியளவிலான முழு அடைப்பை செயல்படுத்துவதற்கான அதன் அறிவிப்பு வெளியிடப்படும் வரை, தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பிஜேபி அரசாங்கத்தின் முயற்சிகள் குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை மையமாகக் கொண்டிருந்தன. மருத்துவ நிபுணர்களிடமிருந்து அதிகரித்தளவில் எச்சரிக்கை குரல்கள் எழுந்த போதிலும், முறையான பரிசோதனை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க இது மறுத்துவிட்டது, ஏன் இப்போது முழு ஊரடங்கு நெருக்கடிக்கு மத்தியிலும் கூட, பாரிய பரிசோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க அனைத்து அரசாங்கங்களுக்கும் உலக சுகாதார அமைப்பு விடுத்திருந்த உத்தரவை பின்பற்றுவதற்கு பிடிவாதமாக இது மறுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஆர். கங்ககேத்கர் (Dr. R. Gangakhedkar) நேற்று, இன்றுவரை இந்தியா மொத்தம் 47,951 பேருக்கு கோவிட்-19 பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது எனத் தெரிவித்தார்.
நேற்றைய 370 புதிய நோயாளிகள் மற்றும் மூன்று இறப்புக்கள் உட்பட, சமீபத்திய நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், “சமூக பரிமாற்றம்” எதுவும் இல்லை என்று இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இயக்கத்தைத் தடுப்பதற்கான அதன் முயற்சிகளை ஆதரிக்கக் கோரி இந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகையில், ஒவ்வொரு பத்து புலம்பெயர்ந்த நபர்களில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஒரு அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்!
இந்தியாவின் அடர்த்தியான மக்கள்தொகை, மிகுந்த வறுமை, மற்றும் பாழடைந்த நகர்ப்புற மற்றும் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால், கொரொனாவைரஸ் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பயங்கரமான அச்சுறுத்தலாக உள்ளது. மோடி அரசாங்கத்தின் பேரழிவுகர முழு ஊரடங்கு உட்பட, அதன் நடவடிக்கைகள் அச்சுறுத்தலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த பிராந்தியத்திலும் மற்றும் உலக அளவிலும் இந்தியா ஒரு முன்மாதிரியாக உள்ளது என்று பெருமிதமாக கூறிக் கொள்ளும் மோடி அரசாங்கத்தின் செயலுக்கான ஒரு முக்கிய காரணியாக இந்த நுண்கிருமியை எதிர்த்துப் போராடுவது குறித்து 21-நாள் முழு ஊரடங்கை திணித்திருப்பதற்கு, அதன் வகுப்புவாத, சர்வாதிகார அரசியல் திட்ட நிரலை அதற்குள் செயல்படுத்திவிட முடியும் என்ற அதன் கணக்கீடு தான் காரணம். முழு ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு முந்தைய மாதங்களில், அதன் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த பெரும் எதிர்ப்பையும் மற்றும் சிக்கன நடவடிக்கை மற்றும் மிகக் குறைந்த ஊதியங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் கண்டு மோடி அரசாங்கம் ஆட்டம் கண்டிருந்தது.
குறிப்பாக, கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கையை தணிக்கை செய்ய அனுமதிக்கும் படி கோர உச்ச நீதிமன்றத்தை நேற்று அரசாங்கம் அணுகியது. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “கோவிட்-19 தொடர்பான செய்திகளை அரசாங்கத்தின் அனுமதியின்றி வெளியிடுவதை தவிர்ப்பதற்கு செய்தி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் அது முன்வைத்துள்ளது.
தற்போது இந்தியாவை சீர்குலைத்து வரும் சுகாதார மற்றும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு மோடி அரசாங்கம் மற்றும் அதன் பிஜேபி இன் தோல்வி மட்டும் காரணம் அல்ல, மாறாக இந்திய முதலாளித்துவமும் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் கூட அதற்கு காரணம்.
பல தசாப்தங்களாக, மத்திய மற்றும் மாநில அளவில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதத்திற்கு சற்று கூடுதலான தொகையை மட்டுமே சுகாதார செலவினங்களுக்காக பயன்படுத்தி வருகின்றன. பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி முதல் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ வரையிலான அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் பின்பற்றிய முதலீட்டாளர் சார்பு கொள்கைகளினால் கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதி உட்பட பல கோடி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் காலத்தில் மட்டும் என்பது ஒருபுறமிருக்க, சாதாரண காலங்களில் கூட சுகாதார சேவையை எளிதாக கிடைக்கமுடியாத நிலையை உருவாக்கியிருக்கின்றது. நடுத்தர வர்க்கத்தின் மிகவும் சலுகை பெற்ற பிரிவுகள், பணக்காரர்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் கொண்ட இந்தியாவின் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வர்க்கம் தவிர, கோடிக்கணக்கான மற்றவர்கள், ஒரு ஒட்டுவேலை தனியார் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பிலிருந்து கவனிப்பை பெறுவதற்காக பாரிய கடன்களை சேர்ப்பது உட்பட பெரும் நிதி தியாகங்களைச் செய்கிறார்கள். இந்தியாவில் வெளிநோயாளிகளின் வருகைகளில் 82 சதவீதமும், உள்நோயாளிகளில் 58 சதவீதமும் தனியார் துறையினராகும்.
நன்றி சோசலிச வலைத்தளம்
0 comments :
Post a Comment