Saturday, April 11, 2020

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் ஐவருக்குக் கொரோனா தொற்று!

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 28 பேரில் ஐவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக நேற்று இரவு தெரியவந்ததாக ஜா-எல நகரசபையின் பொதுச் சுகாதார அதிகாரியான அநுர அபேரத்ன தெரிவித்தார்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றியதன் காரணமாக அவருடன் நெருங்கிப் பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலுக்குள் இருக்குமாறு கூறியபோதும், அதுதொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தாததன் காரணமாக மேல் மாகாண கடற்படைப் புலனாய்வுப். பிரிவினர் அவர்களைக் கண்டுபிடித்தனர் எனவும் பொதுச் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டோரில் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தோன்றியுள்ளதால், குறித்த பெண்மணி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கும் கொரோனா வைரசு தொற்றியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டார்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்திலிருந்து கடற்படைப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கொரோன தொற்றாளர் மற்றும் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், அவர்கள் இடத்திற்கிடம் சென்று வந்துள்ளனர் எனவும் ஜா-எல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினில் கொரோனா தொற்றாளர்களாக 13 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4 பேர் பெண்கள் எனவும் ஜா-எல பொதுச் சுகாதார அதிகாரிப் பணிமனைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com