சிவராமின் உண்மைமுகம் ...
விடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூர இரண்டைக்கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.
சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.
(1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.
(2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம்(வல்லிபுரம்) என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன்(சாமித்தம்பி லோகேந்திரராசா, கடற்கரைச்சேனை, மூதூர்) என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட்(பூனைக்கண் கொண்டவன்) ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும் PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.
மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. (பார்க்க:
http://www.uthr.org/SpecialReports/spreport19ptII.htm#Who)
PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.
1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org
) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட
Siva Sinnapodi அவர்களின் கட்டுரையிலும் காணலாம்.
2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)
3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.
வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை. சிவராம் வன்னிப்புலிகளிடம் தன் உறவினரான பேராசிரியரின் விடுதலையை வேண்டி ஒடிப்போனார். (கருணாவை கடுமையாகக்கிண்டலடித்து சிவராம் எழுதிய வீரகேசரி கட்டுரை வன்னியில் லைத்துத்தான் எழுதப்பட்டது. அதனை பொட்டம்மான் மெய்ப்புபார்த்து சிவராமுக்கு பாவவிமோசனம் அளித்து அனுப்பினார்)
தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர் பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.
சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்
“உங்களை நம்பேலாது மச்சான்”
இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.
இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.
சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.
மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.
ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.
அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.
மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.
- நட்சத்திரன் செவ்விந்தியன்.
(தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005)).
1 comments :
100% truthfull story
Post a Comment