Sunday, April 12, 2020

அன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா? பீமன்

புலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதிவொன்றை இட்டிருந்தார். அந்தப்பதிவில் கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் எமது பெண்களை 'கதறக் கதற கற்பழித்திருந்தனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்பதிவின் பின்னர் புலிவியாபாரிகளும் , புலிவாலில் தொங்கிக்கொண்டிருக்கும் அரசியல் அநாதைகளும், அவரது கருத்துச்சுதந்திரத்திற்கு சவால் விட்டு , பதிவையே நீக்கிகொள்ளுமளவுக்கு உளவியல் தாக்கமொன்றை கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.

தமிழர் தேசத்தில் கருத்துச்சுதந்திரத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த அச்சுறுத்தலே தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு காரணமாகும். 'சுவருக்கும் காதுண்டு' என பீதியை ஏற்படுத்தி மக்களை வாயடைக்கச் செய்ததன் ஊடாக புலிகளின் பேயாட்டம் மேலோங்கியது. மக்களால் எதிர்ப்புக்காட்ட முடியாது போனது, அராஜகத்திற்கு எதிராக அணி திரள முடியாது போனது. இந்த அவல நிலையை தொடர்ந்தும் கொண்டுசெல்வதற்கு தமிழ் மக்களின் சாபக்கேடுகளான சில கோடாரிக்காம்புகள் ஊடகம் என்ற போர்வை போர்த்திக்கொண்டு இன்றும் செயற்பட்டுவருகின்றார்கள்.

உண்மைகள் இயற்கையாக வெளிவரும் தன்மை கொண்டவை. செல்வியின் இப்பதிவை வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை வீழ்த்தநினைக்கின்றனர் அரசியல் அநாதைகள். ஆனாலும் புலிகள் ஏப்ரல் 10 ம் திகதியன்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள், பெண்புலிகளின் அந்தரங்க உறுப்புக்களில் சுட்டு வினோதமடைந்தார்கள், அவர்களது உடைகளை களைந்துவிசீ வெயிலில் காயப்போட்டார்கள் என்பதெல்லாம் இன்றுவரை புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள். இவற்றை நான் கண்ணால் காணாதவரை உண்மையென்று என்னால் எழுதமுடியாது. ஆனால் மேற்படி குற்றச்சாட்டுக்களை பிரதேச மக்களிடம் நிறையவே கேட்டிருக்கின்றேன்.

அத்துடன் புலிகள் புனிதமானதோர் அமைப்பு என்போர் உணர்ந்து கொள்ளவேண்டியது யாதெனில் , அந்த அமைப்பு வன்செயல்களுடாகவே தம்மை புனிதர்களாக காட்டிக்கொண்டார்கள். அவ்வன்செயல்கள் இருவகைப்பட்டவை:

முதலாவது தம்மீது விமர்சனம் செய்கின்றவர்கள் மீது வன்செயலை பிரயோகித்து விமர்சனங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட தனிக்காட்டு ராஜாக்களாக கொடுங்கோலாட்சி புரிந்தார்கள்.

இரண்டாவது புலிகள் தமது அடிமட்ட உறுப்பினர்களுக்கு தாம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு என்று காட்டிக்கொண்டதுடன் தவறுகள் செய்கிறவர்களுக்கு மெய்சிலிர்கும் தண்டனை கொடுத்தனர். ஆனால் உயர்மட்டப் புலிகளுக்கு ஒழுங்குவிதிகளிலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு இரண்டு உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.

முதலாவது : புலிளமைப்பில் கருணாவிற்கு முக்கிய இடம்கொடுக்கப்பட்டிருந்து. அவருக்கு 150 மேற்பட்ட மெய்பாதுகாவலர்கள், போக்குவரத்தின்போது 10க்கு மேற்பட்ட வாகனங்கள் , 25 மோட்டார்சைக்கிள்கள் பாதுப்புக்கிருந்தது. இவ்வாறான நிலையில் கருணா பிரிந்து சென்றபோது அவர் மட்டக்களப்பிலிருந்த முக்கிய பெண் தளபதி ஒருவருடன் தகாத உறவில் இருந்தாக சக்தி ரிவியின் மின்னல் நிகழ்சியில் தமிழ் செல்வன் கூறினார். அவ்வாறாயின் 150 மெய்பாதுகாவலர்களுக்கும் தெரியாமலா கருணாவும் - அந்த பெண் தளபதியும் தகாத உறவில் ஈடுபட்டனர்?

இரண்டாவது : யாழ் மாவட்ட தளபதியாவிருந்த கிட்டு என்பவன் எப்பேர்ப்பட்ட பெண்பித்தன் என்பது வட மாகாணமே அறிந்த விடயம். கிட்டு தான் காதலித்த பெண்களில் ஒருத்தியை கேலிசெய்ததற்காக யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மட்டக்களப்பு மாணவன் ஒருவனை காணாமல் ஆக்கியுள்ளான். மேலும் கிட்டு மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றிக்கொண்டிருந்த பொறியிலாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்தமையும் அந்த பெண்ணின் வீட்டினுள் இருந்துவரும்போதே அதிகாலை 1 மணியளவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கால் இழந்ததும் வரலாறுகள்.

மேலும் புலிகள் ஒழுக்கமானவர்களா அவர்கள் பாலியல்பலாத்காரம் செய்து பெண்களை கொன்றுள்ளார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவிரும்புவோர் பெரியநீலாவணை என்ற கிராமத்துக்குச் செல்லுங்கள். அவ்வூரிலுள்ள 1974ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தோரைச் சந்தித்து சித்திரா என்ற பெண்ணுக்கு 1989 ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அக்கிராமத்தவர்கள் பல கதைகள் கூறக்கூடும். நான் சுருக்கமாக கூறுகின்றேன்..

சித்திரா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உடலம் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை. உடலமாவது கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த உறவினர்களுக்கு அவரது சடலம் பெரியநீலாவணை மயாணத்தில் புதைக்கப்பட்டிருந்கும் தகவல் கிடைக்கப்பெற்றது அவர்கள் அதை தோண்ட முற்பட்டனர். 'தோண்டினால் கொல்வோம்' என்று புலிகள் மிரட்டினார்கள். உடலம் பாரமளிக்கப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டதாலேயே அது வழங்கப்படவில்லை.

நற்பட்டிமுனையைச் சேர்ந்த கள்ளத்தம்பி என்று அழைக்கப்படும் (இப்பெயர் அவன் அக்காலத்தில் களவெடுத்துக்கொண்டு திரிந்ததால் வந்தபெயர் - புலிகளில் இணைந்தபின்னர் வெள்ளதம்பியானார்) யோகன், பாண்டிருப்பைச் சேர்ந்த புலேந்திரன் , பாண்டிருப்பைச் சேர்ந்த தியாகு , யாழ்பாணத்தைச் சேர்ந்த சிவகுமார் , அன்பு (எந்த ஊர் என்று தெரியாது) மற்றும் சிலர் இணைந்தே இக்கொடுமையை செய்திருந்தனர்.

பின்னாட்களில் புலேந்திரன் தவிர மேற்படி நால்வரும் ஒவ்வொரு சந்தியில் மண்டை சிதறிக்கிடக்க எனது கண்ணால் கண்டேன்.

கற்பழித்ததை நான்கண்டேனா என்ற கேள்வி நியாயமானது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களில் ஒரிருவர் பின்னர் பிறதரப்பினரிடம் மாட்டிக்கொண்டபோது, அவர்கள் கற்பழித்தனை ஏற்றுக்கொண்டதாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அறிந்தேன்.

மேலும் இந்திய இராணுவம் இருந்த காலத்தில் ஊர்களில் புலிகள் ஒழிந்திருந்தனர் , அவர்கள் எப்போதும் ஆண்துணைகள் இல்லாத வீடுகளுக்குள்ளேயே நுழைந்திருந்தனர். கணவன் மத்தியகிழக்கு நாடுகளிலுள்ள வீடுகள் மற்றும் கணவனை இழந்த இளம்பெண்களுள்ள வீடுகள். அவ்வாறான பெண்கள் சிலருக்கு பிள்ளைகள் பிறந்தது கணவரை வெருட்டி வரவழைத்து பிறப்பு பதிவு செய் என்ற சம்பவங்களெல்லாம் நடந்தது..
எனவே புலிகள் ஒழுக்க சீலர்கள் என்பதெல்லாம் புலிகளால் வலிந்து திணிக்கப்பட்ட மாயை.

வரலாறு கறைகளை சுமந்து நிற்கின்ற நிலையில் புலிகளுக்கு வெள்ளையடிக்க முற்படுவோரிடம் நான் கேட்கின்றேன், புலிகளின் தத்துவாசிரியர் என்று அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் தன்னுடன் தாய்லாந்து பேச்சுவார்த்தைக்கு வந்த புலி உறுப்பினர்கள் யாவரும் (தமிழ் செல்வன் உட்பட) விபச்சார விடுதிகளிலேயே நேரத்தை கழித்தாக கூறியிருந்தாரே, அந்தநேரம் இன்று குத்திமுறிகின்ற ஊடகவியலாளர்கள் எங்கே சென்றிருந்தார்கள்? அன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம் செல்வி கூறினால் தந்திரமா?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பெண்களணித் தலைவியின் கருத்தைக்கேட்டு பொங்கியெழும் பூசாரியாரிடம் ஒருகேள்வி :

தங்களைடைய கட்சியின் பெருநதலைவர் சம்பந்தனும் தளபதி சுமந்திரனும் புலிகள் வன்செயலில் ஈடுபட்டார்கள், மனித உரிமைகளை மீறினார்கள் , சகோதர இயக்கங்களை கொன்றொழித்தார்கள் , எனது நண்பன் கதிர்காமரை கொன்றது மாத்திரமல்லாது என்னை கொலைப்பட்டியலில் வைத்திருந்தார்கள் என்றபோது , ஐயகோ இது அபச்சாரமல்லோ, தலைவா ! தளபதியே ! புலிகள் புனிதமானவர்கள் என்று ஏன் பொங்கியெழவில்லை. அவ்வாறு பொங்கினால் அடுத்த தேர்தலில் சீற் கிடையாது என்ற பயமோ அல்லது தலைவரும் தளபதியும் கூறியவை அப்பழுக்கற்ற உண்மை என உணர்ந்ததனாலா?

உண்மைகள் மறைக்க முற்படுவோருக்கு நான் கூறக்கூடியது யாதெனில் காற்றடைத்த பலூண் ஒன்றை நீரினுள் அமிழ்த்தி வைத்திருந்தல் சிரமமான கருமமாகும், அது என்றோ ஒருநாள் இயற்கையாக வெளிவரும் திறன் கொண்டது. அவ்வாறுதான் உண்மைகளும்..

எனவே உணர்ச்சி என்ற அரக்கனைகொண்டு அடக்க முற்படாது கருத்துச்சுதந்திரத்திற்கு வழிவிடுங்கள்..

செல்விக்கு தான் கேள்விப்பட்டவற்றை அல்லது தனது மனதில் பதிந்துள்ளவற்றை கூறுவதற்கு சுதந்திரமளிக்கப்படவேண்டும்.

1 comments :

Subashnj April 17, 2020 at 10:12 AM  

வணக்கம் நான் தமிழ்நாட்டில் உள்ள தமிழன்.எனக்கு நீங்கள் கூறும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது பொய்யா உண்மையா என குழப்பமடைகிறேன்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com