உயிர்த்த ஞாயிறில் உயிர் பறிக்கப்பட்டவர்களை நினைவுகூறக் கோருகின்றார் மஹந்தர்!
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது 2019 ஏப்ரல் 21 ஆந் திகதி மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள மூன்று பிரதான ஹோட்டல்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக 250க்கு மேற்பட்டோர் மரணித்ததுடன், 500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். மரணித்த மற்றும் காயமடைந்தோரில் பெரும்பாலானோர் ,யேசுநாதர் உயிர்த்தெழுந்தமையினை நினைவுபடுத்தும் வகையில் தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்கள் ஆவர். இது ஆசியாவில் மாத்திரமன்றி, உலக மட்டத்திலும் சிவில் பிரஜைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் ஆகும். அது சர்வதேசத்தின் நினைவுகளில் உள்ள 1995 டோக்கியோ நகர விஷ வாயுத் தாக்குதல், 1995 ஒக்லஹோமா குண்டுத் தாக்குதல், 2005 லண்டன் குண்டுத் தாக்குதல், 2008 மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்றளவு சேதங்கள் ஏற்படவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக உயிருக்காகப் போராடி அண்மையில் மரணத்தைத் தழுவினார். காயமடைந்த சிலர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இலங்கையருக்கு தற்கொலைத் தாக்குதல்கள் என்பது புதிய ஒன்றல்ல. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பிரிவினைவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் திகதி, இலக்கான இடங்கள், பங்குபற்றிய தீவிரவாதிகளின் பெயர்கள், முகவரிகள், அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கூட எமது நட்பு நாடொன்றின் உளவுப் பிரிவினரால் முன்கூட்டியே அப்போது ஆட்சியிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. அதனால் இந்தத் தாக்குதலை இலகுவாகத் தடுத்திருக்க முடியும்.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இந்த தாக்குதல்களில் மரணித்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் தமது வீடுகளில் விளக்கேற்றுமாறு அனைத்து கத்தோலிக்க பக்தர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலில் மரணித்த, காயமடைந்த, அங்கவீன நிலைமைக்கு உட்பட்ட அனைவரையும், தாம் பின்பற்றும் சமயத்திற்கு ஏற்ப நினைவுபடுத்துமாறு நான் அனைத்து இலங்கையரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் துணை. கடவுள் துணை.
0 comments :
Post a Comment