உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹிஸ்புல்லா கைது! மைத்திரியின் நிலைமையும் கவலைக்கிடம்!
இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணியான இவர் இன்று புத்தளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேசத்தில் நேற்று றிசார்ட் பதுயுதீனின் சகோதரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் குறித்த தாக்குதல் பற்றிய விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவர் மீது மட்டுமே சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் இதுவரை ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் மட்டும் பதிவு செய்துகொண்டிருக்கின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதோடு சுதந்திரக் கட்சி மற்றும் மொட்டுக் கட்சியின் கூட்டணியில் பதில் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment