Wednesday, April 1, 2020

குறித்த 6 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் திங்கள் வரை ஊரடங்கு!

கொரோனா வைரசுப் பரவல் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையுடைய மாவட்டங்களாகக் கருதப்படுகின்ற கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலிலிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணிக்குத் தளர்த்தப்பட்டதுடன், இன்று பி.ப 2.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். எதிர்வரும் திங்கட் கிழமை காலை 7.00 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும். அன்றைய தினம் மீண்டும் 2.00 மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வரும்.

அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த விடயங்களுக்காக மாவட்டத்தில் அங்குமிங்குமாக பயணம் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கெதிராகச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கக் கூடிய செயற்பாடுகளை அரசு முன்னெடுத்துள்ளது.

எந்தவொரு மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிறிய தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுப் பரவுவதைத் தடுப்பதற்காகவே மக்களின் நன்மை கருதி அரசாங்கம் பல்வேறு விடயங்களை முன்னெடுத்துள்ளது. அதனால் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படுகின்ற அறிவித்தல்களைச் சரிவரக் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் முடக்கப்படுள்ள பகுதிகளாக அரசாங்கம் அறிவித்தவை தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும். தொடர்ந்தும் இந்தப் பிரதேசங்களுக்குச் செல்வதும் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு வருவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com