Thursday, April 16, 2020

45 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தியே தீருவோம்!!

எம்மை விடவும் மிகவும் மோசமாக “கொவிட் -19” கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியா ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளது. மிகவும் வெற்றிகரமாக அவர்கள் தேர்தலை நடத்தியுள்ளனர்.

அவ்வாறு இருக்கையில் எம்மால் ஏன் தேர்தலை நடத்த முடியாது என கேள்வி எழுப்பும் இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால, தேர்தலை நடத்த 45 தினங்கள் அவகாசம் உள்ளது எனவே ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி நாட்டின் ஜனநாயக தன்மையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,தேர்தலை நடத்த முடியாதென எந்த உறுதியான காரணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறவில்லை. அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுங்கள் என கூறியுள்ளது.

எனினும் நீதிமன்ற ஆலோசனை தேவையில்லை என ஜனாதிபதி செயலாளர் பதில் தெரிவித்துள்ளார். எவ்வாறு இருப்பினும் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தியாக வேண்டும்.

இன்னமும் 45 நாட்கள் தேர்தலை நடத்த அவகாசம் உள்ளது. எமது வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி நாட்டினையே தீவைத்த நேரத்தில் கூட தேர்தல் முறையாக இடம்பெற்றது.

83 ஆம் ஆண்டு தேர்தல் போன்று மோசமான தேர்தல் இலங்கை வரலாற்றில் இல்லை என்ற பெயர் உள்ளது. இன்று அவ்வாறான நிலைமை இல்லை. சகல மாவட்டங்களிலும் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் மட்டுமே எமக்கு நெருக்கடியாக உள்ளதே தவிர மக்கள் வாழக்கூடிய நிலைமை உள்ளது. ஆகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் தேர்தலை நிறுத்துவது பொருத்தமில்லை. அது ஜனநாயகத்தை மீறும் செயலாகும்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் நாடு இராணுவ ஆட்சிக்குள் தள்ளப்படும் என கூறினார்கள். இன்று அவரே தேர்தலை நடத்த வேண்டும் என கூறியும் அதனை தடுக்க நினைக்கின்றனர். ஆகவே ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி நாட்டின் ஜனநாயக தன்மையை உருவாக்குவதே எமது நோக்கமாகும். இந்த நாட்டினை பலவீனப்படுத்தினால் நாட்டின் இஸ்திரத்தன்மைக்கே பாதிப்பு ஏற்படும்.

பாராளுமன்ற தேர்தலை நடத்தாது போனால் சட்ட ரீதியில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆகவே அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுவதை விடுத்து நாட்டினை முழுமையாக வீழ்த்த எவரும் முயற்சிக்கக் கூடாது. தேர்தல் நடத்துவது என்பது யார் வெற்றி பெறுவது என்பதற்கும் அப்பால் நாட்டின் மக்களின் ஜனநாயக உரிமையை பலப்படுத்துவதாகும். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள், சஹரான் கும்பலுடன் இணைந்து செயற்பட்டவர்கள் இன்று நாட்டினை மேலும் நாசமாக்க முயற்சிகளை எடுக்கின்றனர்.

தேர்தலை நடத்த இருக்கும் தடைகள் என்ன என்பதை அவதானித்து அதனை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் டெங்கு, மலேரியா ஏனைய நோய்களினால் பலர் இறந்தனர். அப்போதெல்லாம் நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. இப்போது அந்தளவு இழப்பு எமக்கு ஏற்படவில்லை.

வைரஸ் பரவும் எச்சரிக்கை உள்ளது. ஆனால் அதனை கட்டுப்படுத்த எமது வைத்திய அதிகாரிகள் மிகச் சிறப்பாக செயற்படுகின்றனர். தேர்தல் நடத்துவதால் வரும் பிரச்சினையை விடவும் பல மடங்கு நெருக்கடியை தேர்தல் நடத்தாது விட்டால் சந்திக்க நேரிடும். இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எம்மை விடவும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியா நேற்று ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளது. மிகவும் வெற்றிகரமாக அவர்கள் தேர்தலை நடத்தியுள்ளனர். ஆகவே எம்மாலும் ஆரோக்கியமான விதத்தில் தேர்தலை நடத்த முடியும். மக்களை பாதுகாக்கும் புதிய வழிமுறைகளை பயன்படுத்தி தேர்தலை நடத்தியாக வேண்டும். 27 ஆண்டுகள் யுத்தத்தில் தேர்தலை சந்தித்த எம்மால் இப்போது சவால் அல்ல. ஆகவே ஜனநாயகத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com