Monday, April 20, 2020

18 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு

18 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று (20) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டமே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும். அதன் பின்னர் மீண்டும் அறிவிக்கும் வரை இந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அமுலில் இருக்கும்.

இதேவேளை கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவதுகொடை, அகுரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடையாளங்காணப்பட்ட 21 பொலலிஸ் பிரதேசங்களில் அதாவது கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், பம்பலபிட்டிய, வாழைத்தோட்டம், மருதானை, கொதடுவ, முல்லேரியாவ, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை மற்றும் கொ{ஹவலை ஆகிய பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்தில், ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை ஆகிய பகுதிகளிலும், புத்தளம் மாவட்டத்தில், புத்தளம், மாரவிலை மற்றும் வென்னப்புவை ஆகிய பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தில், பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கமை வரகாபொல, அகுரணை, அலவதுகொடை மற்றும் அக்கரைப்பற்று (பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.) ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன் கிழமை காலை 5.00 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை, மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்குடன் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்.
ஏதேனும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாக பயணம் செய்யமுடியும்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் பிரதான வீதிகளை தொழிலுக்காக சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்கும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.

கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்களே தீர்மானிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவை மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய விழாக்களையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது. பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.

எனினும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com