Wednesday, March 18, 2020

முல்லைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை .

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் இறுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண மட்டத்திலும், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலும் கொரோனா விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் மாவட்ட மட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைத்து இந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு விசேட கூட்டத்தை நடத்தி விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரையில் எந்தவொரு கொரோனா தொற்று நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் 3 பேர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முல்லைத்தீவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

அவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கள் எவையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளிலிருந்து முல்லைத்தீவு பகுதிக்கு வருகைதந்த 42 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றோம். நோய் நிலைமைகள் இருப்பதாக சந்தேகம் கொள்பவர்கள் ஆரம்பகட்ட பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு வர முடியும். எமது வெளிகள சுகாதார அதிகாரிகள் மிகவும் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கொரோனா நோய் நிலைமை சம்பந்தமாக தேவையான வளங்களையும் தேவையான உபகரணங்களையும் தேவையான ஆளணிகளையும் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளோம். கொரோனா நோய் நிலைமைகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சமாளிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment