கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதம அமைச்சர் தெரிவிப்பு
அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தை மையப்படுத்தி தற்போது செயற்படுத்தப்படும் கோவிட் 19 வைரஸ் (கொரோனா) பரவுவதைத் தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கடந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதம அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பில் கட்சித் தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இத்தீர்மானத்தை மேற்கொண்டார். அதற்கமைவாக எதிர்காலத்தில் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, கொரோனா பரவுவதைத் தடுப்பது தொடர்பாக அவர்களின் கருத்துக்கள்,
முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய கட்சித் தலைவர்கள், எதிர்காலத்தில் கோவிட் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதாகவும் தெரிவித்தனர்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் ஆரம்பத்தில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நீண்ட விளக்கமொன்றை வழங்கினார். வைரஸ் நிலைமை காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பொருளாதாரப் பாதிப்பினைக் குறைத்துக்கொள்வது தொடர்பாகவும் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடினர்.
அத்தியாவசியப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக தற்போது அரசாங்கம் செயற்படுத்தும் முறைமையைத் தொடர்ந்தும் செயற்படுத்துமாறும், தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்புடைய தேயிலைக் கொழுந்து பறித்தல், தொழிற்சாலைகளை நடாத்திச் செல்லுதல், மொத்த விற்பனை நிலையங்களைத் திறந்து வைத்தல் என்பன மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அந்தப் பொறிமுறையை மேலும் ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன்போது பிரதம அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா அனர்த்தத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவும் தற்போது கவனஞ் செலுத்தியுள்ளதாக இதன்போது பிரதம அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுகாதார வேலைத்திட்டத்தைப் பாராட்டியதுடன், அந்த வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது எனவும், மக்கள் ஒன்றுசேர்வதைத் தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்துவதுடன், அத்தியாவசியமற்ற அரச அலுவலர்களின் விடுமுறையை மேலும் நீடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது மீனவர்களின் மீன் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் மற்றும் அவற்றின் போக்குவரத்துக்கு அனுமதி வழங்காமை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாகவும் இதன்போது கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதுடன் பிரதம அமைச்சர் அச்சந்தர்ப்பத்திலேயே அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
.
0 comments :
Post a Comment