Friday, March 20, 2020

கொரோனாவால் இரத்தப் பற்றாக்குறை.... இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இரத்தம் உள்ளது!

கொவிட் - 19 வைரசு நாடளாவிய ரீதியில் பரவிவருகின்றமை தொடர்பில் நடமாடும் இரத்த முகாம்கள் முடக்கப்பட்டுள்ளமையினால் தேசிய இரத்த வங்கியிலுள்ள இரத்தத்தின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.

தற்போது உள்ள இரத்தம் இரண்டு நாட்களுக்குப் போதியதாகவே உள்ளதுடன் அடுத்த வாரமாகும் போது பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.

'மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, பொரல்ல ரிஷ்வே அம்மையார் சிறுவர் வைத்தியசாலை ஆகியவற்றில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்குத் தொடர்ந்தேர்ச்சையாக இரத்தம் வழங்கப்பட வேண்டும். தேசிய இரத்த வங்கியில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே இரத்தம் சேமித்து வைக்க முடியும். நாடளாவிய ரீதியில் 105 இரத்த மத்திய நிலையங்கள் உள்ளன. நடமாடும் இரத்த சேகரிப்பு முகாம்கள் 105 நாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் 4000 அலகுகள் இரத்தம் சேகரிக்கப்படுகின்றது. கோவிட் -19 வைரசு பரவுதல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது. அதனால் நடமாடும் இரத்த முகாம்களை நடாத்திச் செல்லவும் இயலாத நிலை உள்ளது' எனக் குறிப்பிட்ட அவர்,

தற்போது அவசியமாகியுள்ள இரத்தத்தை ஈடுசெய்வதற்காக இரத்த தானம் வழங்க விரும்புவோர் அதற்கு முன்வருமாறும் அதற்காக 011-5332153 / 011-5332154 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com