Friday, March 20, 2020

கருணாவின் வாய்க்கு கட்டாயம் பூட்டு வேண்டும். பீமன்.

இலங்கையின் 16 வது பாராளுமன்றுக்கு 225 பேரை தெரிவு செய்துகொள்வதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவு பெற்றதுடன், எதிர்வரும் 25 ம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழுனால் ஒத்தியும் வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழர் மகா சபையின் கப்பலில் அம்பாறை சென்றுள்ள புலிகளின் மட்டு-அம்பாறை முன்னாள் இராணுவத் தளபதி கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த 18ம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவைத் தாக்கல்செய்துவிட்டு வெளியேறிய விநாயகமூர்த்தி முரளிதரன் மாவட்ட செயலக முன்றலில்வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் படுதோல்வியடைவார் என ஜோதிடம் கூறியிருந்தார்.

கருணாவின் மேற்படி கருத்தானது கண்டனத்திற்கும், கேலிக்குமுரியதாகின்றது. தமிழ் மக்கள் சந்தித்துள்ள சகலவித அழிவுகளுக்கு, பிரதானமாக மட்டு அம்பாறை மக்கள் எதிர்கொண்ட பெரும்பாலான அழிவுகளுக்கு நேரடி பதில்கூறவேண்டியவராகவும் சூத்திரதாரியாகவும் காணப்படும் கருணா, காலத்தின் தேவையுணராது, தனது காழ்புணர்ச்சியை தீர்த்த கருத்தாகவே கருணாவின் மேற்படி கருத்து நோக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மாறி மாறி அரச பீடமேறும் அதிகார சக்திகள், யாழ் மேலாதிக்க குறுந்தேசிய தலைமைகள் மற்றும் முஸ்லிம்கள் என்ற மூத்தரப்பினராலும் பந்தாடப்படும் தருணத்தில், கிழக்கு மக்களுக்கான தனித்துவமான தலைமையொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. அவ்வாறானதோர் தலைமைத்துவம் கிழக்கின் புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் நிரப்பப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அது நிறைவேறப்படாமைக்கான காரணிகள் ஏராளமானவை.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தாம் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றோம், கைவிடப்பட்டிருக்கின்றோம், பயன்படுத்தப்பட்டிருக்கின்றோம் என்று உணருகின்ற மக்கள் மாற்றுத்தேர்வொன்றினை நாடி நிற்கின்றனர். அதன் வெளிப்பாடு நிச்சயமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதிபலிக்கும். இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான கிழக்கு தமிழர் எழுச்சிக் கூட்டணி தோல்வியடையவேண்டும் என எதிர்பார்க்கின்றார் என்றால் கருணாவின் எதிர்பார்ப்பு என்ன? பிள்ளையான் தலைமையிலான கட்சி தோல்வியடையவேண்டுமென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிவாகைசூடவேண்டும் என எதிர்பார்க்கின்றாரா?

கருணா – பிள்ளையானுக்கிடையேயான தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் தமிழ் குறுந்தேசியவாதிகளால் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. பிள்ளையான் தோற்கடிக்கப்படவேண்டும் என்ற கருணாவின் விருப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கயவர் கூட்டத்திற்கு எதிரான கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டும் என கருணா கருதுவது நயவஞ்சகமானதும் சமூகவிரோதமானதுமாகும். மக்கள் தற்போது மிகுந்த அரசியல் தெளிவுள்ளவர்களாகவுள்ளனர். அவர்கள் படகின் பட்டியலில் சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்வர். எனவே கருணா தனக்கு ஒரு கண்போனாலும் கேடில்லை எதிரிக்கு இரு கண்களும்போகவேண்டும் என்ற செயற்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

கடந்த 9 ம் திகதி வரை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சின்னத்தில் அம்பாறையில் போட்டியிடுவதற்கு உத்தேசித்திருந்த கருணா தனது மனைவிக்கு மட்டக்களப்பில் படகின் வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்காமை காரணமாகவும் பிறகாரணங்களுக்காகவும் தனது நோக்கத்தை கைவிட்டு அம்பாறைக்கு கப்பலேறினார் என்ற உண்மை மக்கள் அறிந்து கொள்ளாத ஒன்றல்ல.

எனவே கருணா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மறைமுகமாக வெற்றியை உறுதிபண்ணும் நோக்கில் செயற்படுவதை நிறுத்தும்பொருட்டு தனது வாய்க்கு சுயமாக பூட்டு ஒன்றினை போட்டுக்கொள்ளவேண்டும்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com