Monday, March 2, 2020

இலங்கையை முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வௌிச்சத்திற்கு வந்துள்ளன! விஜயதாச ராஜபக்ஷ

உலக நாடுகள் பலவற்றில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகப் பலநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும், அதற்கான முக்கிய காரணமாக அவர்களால் முன்வைக்கப்படுவது முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அடிப்படைவாதிகள் என்பதுமே. இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடிய மிலேச்சத்தமான படுகொலையின் பின்னணியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என பலதரப்பினரும் தங்களது எதிர்ப்பை இன்று வரை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைச் சிங்களவர்களிடமிருந்து பெற வேண்டுமாயின், முஸ்லிம்கள் சார்ந்த பல விடயங்களில் அரசு தலையிட்டு முஸ்லிம்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக வைத்துக்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றார் ரத்ன தேரர்.

பற்றுகின்ற எண்ணெய்யில் நெய் வார்ப்பது போன்று அவரது கருத்துடன் உடன்பட்டு நேற்று முன்தினம் முன்னாள் நீதியமைச்சர் விஜயபால ராஜபக்ஷ,

'எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான், ஆசாத் ஸாலி போன்ற அடிப்படைவாத அரசியல் தலைவர்கள் இலங்கையை ஒரு முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு முனைந்து வருகின்றனர். ஏனைய நாடுகளுக்குள் இடம்பெறுகின்ற உட்பூசல் போல இலங்கையிலும் உட்பூசலை ஏற்படுத்தி குளிர்காய முனைகின்றனர். அவர்கள் பிறநாட்டு அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளையே இலங்கையிலும் முன்னெடுக்க முனைகின்றனர்.

அவர்களின் இந்தத்திட்டத்தின் மூலம் இலங்கையில் ஹலால் உணவை ஊக்குவித்தல், ஹிஜாப் மற்றும் நிகாப் போன்ற பெண்களின் முகமூடிகளை ஊக்குவித்தல், ஷரியா சட்டத்தை கற்பித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல், அறபு மொழியைத் திட்டமிட்டு செயல்படுத்துதல் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.' போன்ற சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

சென்ற ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் சாட்சியங்களை அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment