பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? வை எல் எஸ் ஹமீட்
பாராளுமன்றம் கலைதல்: கலைத்தல்
கலைதல்
பாராளுமன்றம் தேர்தலின்பின் முதலாவது கூடிய திகதியில் இருந்து ஐந்து வருடமுடிவில் சுயமாக கலைந்துவிடும். [அரசியலமைப்பு சரத்து 62(2)]
அவ்வாறு சுயமாக கலையும்போது பாராளுமன்றம் கலைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஆனால் தேர்தலுக்கான திகதி/திகதிகள் மற்றும் தேர்தலின்பின் பாராளுமன்றம் முதலாவது கூடுகின்ற திகதி குறித்தான வர்த்தமானி வெளியிடவேண்டும்.
பாராளுமன்றம் முதலாவது கூடுகின்ற திகதி அந்த வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதியில் இருந்து மூன்று மாதத்திற்கு பிந்தாததாக இருக்கவேண்டும். [சரத்து 70(5)(b)]
கலைத்தல்
—————
பாராளுமன்றத்தின் 4 1/2 வருடத்தின்பின் அல்லது அதற்குமுன் எனில் 2/3 பெரும்பான்மையால் பாராளுமன்றம் வேண்டுகோள் விடுக்கும்போது ஜனாதிபதி கலைக்கலாம்.
இவ்வாறு கலைப்பதற்கு வர்த்தமானி வெளியிடவேண்டும். அவ்வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி/திகதிகள் மற்றும் பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதி குறிப்பிடப்படவேண்டும். முதலாவது பாராளுமன்றம் கூடும்திகதி வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதத்திற்கு பிந்தாததாக இருக்கவேண்டும். [ சரத்து 70(5)(a)]
இந்த இரண்டு சூழ்நிலையிலும் பாராளுமன்றம் முதலாவது கூடுவதற்கான திகதியை ஜனாதிபதி இன்னுமொரு வர்த்தமானிமூலம் மாற்றலாம். ஆனாலும் முதலாவது வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதத்திற்கு பிந்தக்கூடாது.
எனவே, பாராளுமன்றம் சுயமாக கலைந்தாலோ/ கலைக்கப்பட்டாலோ அடுத்த பாராளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் கூடியாகவேண்டும். அதன்பொருள் அதற்குமுன்னர் தேர்தல் நடாத்தப்பட்டாக வேண்டும்.
தேர்தலை ஒத்திவைத்தல்
தேர்தல் ஒத்திவைத்தல் சம்பந்தமாக அரசியலமைப்பில் எதுவும் கூறப்படவில்லை. பாராளுமன்றத்தேர்தல்கள் சட்டத்தில்தான் அது கூறப்பட்டுள்ளது.
அதன் பிரிவு 24(3) இன் பிரகாரம் ஏதாவது ஒரு மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் தேர்தல் நடாத்தப்பட முடியாத அவசரகால அல்லது எதிர்பாராத நிலைமை தோன்றுமாயின் தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானிமூலம் தேர்தலை ஒத்திப்போடலாம். அவ்வாறு ஒத்திப்போடும் திகதி அவ்வர்த்தமானி வெளியிடப்படும் திகதியில் இருந்து 14 நாட்களுக்கு குறைவில்லாமல் இருக்கவேண்டும்.
பிழையான வியாக்கியானம்
“ ஏதாவதொரு மாவட்டத்தில் தேர்தல் நடாத்தமுடியாத சூழ்நிலை தோன்றும்போது ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைக்கலாம்” என்று மேலே சொல்லப்பட்டதை பின்வருமாறு சிலர் பிழையாக வியாக்கியானப்படுத்த முனைகின்றனர்.
அதாவது, அவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக வர்த்தமானிமூலம் 22 மாவட்டத்திலும் ஒத்திவைத்தால் முழு நாட்டிலும் ஒத்திவைத்தாகும். எனவே, தேர்தல் ஒத்திவைப்பது சாத்தியம் என்கின்றனர். இது இரண்டு காரணங்களின் அடிப்படையில் பிழையாகும்.
முதலாவது காரணம்
வியாக்கியானத்தைப் பொறுத்தவரை அரசியலமைப்பு சட்டத்தையும் சாதாரண சட்டத்தையும் வியாக்கியானப்படுத்தும் முறைகளில் வித்தியாசம் உண்டு. சாதாரண சட்டத்தைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தின் எண்ணம் அதேநேரம் அது அரசியலமைப்புடன் இயைதல் என்ற இரண்டு விடயங்கள் பிரதானமாகும்.
முழுநாட்டிற்கும் இந்த சட்டப்பிரிவை அமுல்படுத்துவதும் பாராளுமன்றத்தின் எண்ணமாக இருந்திருந்தால் இந்த சட்டப்பிரிவு முழு நாட்டையும் உள்ளடக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும். மொத்த நாட்டுக்கும் ஒரே வர்த்தமானியில் ஒத்திப்போடாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி வர்த்தமானி வெளியிட்டு மொத்த நாட்டிலும் தேர்தலை ஒத்திப்போடுவது பாராளுமன்றத்தின் நோக்கமாக இருந்திருக்க முடியாது.
எனவே, இது மொத்த நாட்டிற்குமான ஒரு சட்டப்பிரிவாக பாராளுமன்றம் கருதவில்லை.
அரசியலமைப்புடன் முரண்படல்.
சரத்து 70(5) முதலாவது பாராளுமன்றக்கூட்டம் மூன்று மாதத்திற்கு பிந்தக்கூடாது; எனக்கூறியிருப்பதால் மொத்த நாட்டிலும் தேர்தலை ஒத்திப்போட்டால் அது பாராளுமன்றம் முதலாவது கூடுகின்ற திகதியை பாதிக்குமானால் நிச்சயமாக அதற்கு அந்த வியாக்கியானத்தைக் கொடுக்கமுடியாது.
எனவே, இந்த சட்டப்பிரிவு முழுநாட்டிற்கும் ஏற்புடையதல்ல.
சிலவேளை அதன் உண்மையான வியாக்கியானத்தைப் புறக்கணித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக வர்த்தமானி வெளியிடுவதன்மூலம் ஒத்திவைத்தாலும் ஆகக்கூடியது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்களுக்கே ஒத்திவைக்க முடியும். அதுவும் சிலவேளை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்படலாம்.
அவசாரகால சட்டம்
அவசரகாலச் சட்டத்தின்கீழ் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் பிரகடனங்கள் சாதாரண சட்டத்தை மேவக்கூடியது. அதாவது சாதாரண சட்டத்தை அவசரகால சட்டத்தின்மூலம் திருத்தலாம், அவற்றிற்கு முரணான பிகடனங்களைக்கூட வெளியிடலாம். ஆனால் அது அரசியலமைப்பின் சரத்துக்களை மேவமுடியாது.
தேர்தலுக்கான திகதி சாதாரண சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தின்கீழ் தேர்தலை ஒத்திவைக்கலாம். ஆனாலும் முதல் வர்த்தமானி திகதியிலிருந்து மூன்று மாதத்திற்கு மேற்படமுடியாது. இங்கு தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்பு சரத்து 70(5)(a) யின்கீழ். எனவே, அவசரகால சட்டத்தின்கீழ் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
சட்டத்தை திருத்தல்
ஜனாதிபதி ஒன்றைச் செய்யலாம். அதாவது அவசரகால சட்டத்தின்கீழ் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 24(3) ஐ முழு நாட்டிற்கும் ஒரே நேரத்தில் ஒத்திவைக்கக்கூடிய விதத்தில் திருத்தலாம். அவ்வாறு திருத்தினாலும் மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான் ஒத்திப்போடலாம்.
பாராளுமன்றம் மார்ச் மூன்றில் கலைக்கப்பட்டதால் ஜூன் மூன்றிற்குமுன் பாராளுமன்றம் கூடியே ஆகவேண்டும்.
Doctrine of Necessity
தேர்தல் நெருங்கும்போது கோரோனா முழுநாட்டையும் முடக்குமானால் என்ன செய்வது? இரண்டு மூன்று வாரங்களுக்குள் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறமுடியுமா?
அவ்வாறான சூழ்நிலையில் ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் doctrine of necessity ஐப் பாவித்தல்.
அதாவது சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாத, எதிர்பாராத ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படும்போது பாவிப்பது.
உதாரணமாக, பிலிப்பீன்ஸ் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியை பதவி விலகக்கோரி தொடர்போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியும் பதவிவிலகுவதாக இல்லை. போராட்டம் மிகமோசமான கட்டத்தை அடைந்தது. அவரை நேரடியாக நீக்குவதற்கு சட்ட ஏற்பாடுகளும் இல்லை.
இந்நிலையில் அதன் உயர்நீதிமன்றம் இந்த doctrine of necessity ஐயப் பாவித்து அவரைப் பதவி நீக்கம்செய்து உப ஜனாதிபதியை ஜனாதிபதியாக நியமித்தது.
இலங்கை வரலாற்றில் doctrine of necessity பாவிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.
அவ்வாறான மிகமோசமான சூழ்நிலை ஏற்பட்டால் சட்ட ஏற்பாடுகள் இல்லாத நிலையை அல்லது சட்டமுரண்பாடுகளை ஒருபக்கம் வைத்துவிட்டு doctrine of necessity யை பாவித்து தேர்தலை ஒத்திப்போட நீதிமன்றம் தீர்மானம் எடுக்குமா? அல்லது அரசாங்கம்/ தேர்தல் ஆணைக்குழு அவ்வாறு ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கு அங்கீகாரம் வழங்குமா? என்பது தெரியாது?
குறிப்பு: கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டலாம். அது வேறு தலைப்பிற்குரியது.
0 comments :
Post a Comment