நள்ளிரவுடன் பாராளுமன்று கலைகின்றது. 68 பேர் ஓய்வுதியம் இழக்கின்றனர்.
இன்று நள்ளிரவுடன் பாராளுமன்று கலைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகுமெனவும் தெரியவருகின்றது. அவ்வாறு இன்று கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர்களாகின்றனர்.
19ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்று ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கடந்த 2015.09.01 ம் திகதி கூட்டப்பட்ட இலங்கை சனநாயக குடியரசின் 8 வது பாராளுமன்றின் ஆயுட்காலம் நேற்றுடன் நான்கரை ஆண்டுகளான நிலையில் இன்று பாராளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.
அரசியல் யாப்பின் 19ம் திருத்தத்திற்கு முன்னர், பாராளுமன்றின் ஆயுட்காலம் 1 வருடங்கள் நிறைவுபெறின் அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1978ம் ஆண்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் 5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாததன் காரணமாக 68 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வுதிய சலுகைகளை இழக்கின்றனர்.
அதன்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் 36 பாராளுமன்ற உறுப்பினர்களும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் ஓய்வூதிய வரப்பிரசாதத்தை இழக்கின்றனர்.
இலங்கையின் 9 பாராளுமன்றுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 5 திகதிக்கு முன்னர் நடாத்தி முடிக்கப்படவேண்டும். இத்தேர்தலை நடாத்துவதற்கு 550 கோடி செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கு சுமார் இரண்டரைக்கோடி செலவாவதுடன் , ஒரு பாராளுமன்ற உறுப்பினரை 5 வருடங்கள் பராமரிப்பதற்கு சுமார் 10 கோடி ரூபா மக்களின் வரிப்பணம் செலவாகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் குறித்த 5 வருடங்களில் 12.5 கோடி ரூபாவுக்கு மக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக பெரும்பாலானோர் மக்கள் சொத்தில் 500 கோடிக்கு மேலாக கொள்ளையடித்துச் செல்கின்றனர் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment