Wednesday, February 19, 2020

இராணுவத்தினர் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு TNA யும் JVP யும் பொறுப்பாம். கூறுகின்றார் மஹிந்தர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணைந்து ஆதரவளித்த ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால் ஜெனீவாவில் இணை அனுசரணையில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினால்தான் ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பயணத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மஹிந்த இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா என்ன விதமான போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்தார் என்று தெரியாமலேயே ஆதாரங்கள் இன்றி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நபர் நிரபராதியே என்று அறியப்பட வேண்டும் என்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் உள்ள போதிலும் அது இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் எதிராக விதிக்கப்பட்டுள்ள இந்தப் பயணத் தடையில் காணப்படவில்லையே என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இப்போதும்கூட அமெரிக்க அரசாங்கத்திற்கு இந்தப் பயணத் தடை குறித்த கண்டனத்தை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்டோரின் ஆதரவில் 2015ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பில் கொண்டுவரப்பட்ட 30இன் கீழ் ஒன்று என்கிற தீர்மானம் காரணமாகவே ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக இவ்வாறு வேறு நாடுகளினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாரிய அளவில் சுமத்தப்படுவதாகவும் பிரதமரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் முதலாவது பிரிவிலேயே ஸ்ரீலங்கா படையினருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரது குழு தயாரித்த அறிக்கையை வரவேற்று கூறப்பட்டுள்ளது.

எனினும் ஆணையாளரினால் சாதாரண முறைப்படி அல்லாமல் உத்தியோகபற்றற்ற ரீதியில் அமைக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே போரின் பின்னர் ஸ்ரீலங்கா படை மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த 30இன் கீழ் ஒன்று என்கிற தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா விதிக்கப்பட்டுள்ள இந்த பயணத்தடையானது, ஐரோப்பா கூட்டுத் தண்டனையளிக்கப்படும் முறையை நினைவுபடுத்துகின்ற போதிலும் நல்லாட்சி கூண்டில் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தடை விதிக்கப்பட்டமையானது எமது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தாலும் 2015ஆம் ஆண்டு அவர்கள் செய்த மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மறைப்பதற்கான பேச்சாகவே இதனைக் கருதுவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மஹிந்த, தேர்தலில் பொதுஜன முன்னணிக்கு வெற்றிவழியை ஏற்பாடு செய்யவே அரசியல் ஒப்பந்தத்திற்காக அமெரிக்கா இந்த பயணத் தடையை விதித்ததாக ஜே.வி.பி கூறியுள்ளதாகவும், இதனூடாக இந்தப் பயணத் தடையை அவர்கள் மறைமுகமாக வரவேற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் போலியான மேற்குலக நாடுகளின் சக்திகளை எதிர்த்துவந்த ஜே.வி.பி இன்று இராணுவத் தளபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடையை குறைந்த பட்சம் கண்டனம் தெரிவிக்கவும் இல்லை என்பதை மக்கள் நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் மற்றும் இனத்தை சிந்திக்கும் தேசப்பற்று சிந்தனையுடைய சக்திகள் இருக்கின்ற அதேவேளை, தேசத்தை காட்டிக்கொடுக்கும் சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்கும் தேசத்துரோக சக்திகள் இருப்பதை இந்தப் பயணத் தடையின் ஊடாக அடையாளம் காணமுடிகிறது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment