ஐடிஎச் இருக்கும்போது கொரோனா நோயாளிகளை மாந்தீவு கொண்டுவர முயற்சிப்பதன் நோக்கம் என்ன? Dr. வாசுதேவன்.
நவீன வசதிகளுடனும் துறைசார் வைத்திய நிபுணர்களுடனும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென முல்லேரியாவில் வைத்தியசாலை ஒன்று இருக்கும்போது கொரோனா நோய்தொற்றுக்குள்ளானவர்களை எதற்காக மாந்தீவுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் அதானல் உருவாகக்கூடிய ஆபத்துக்களை விளக்கியுள்ளார் வைத்தியர் கனகசபாபதி வாசுதேவன்.
அவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ள ஆக்கம் இவ்வாறு செல்கின்றது.
நாளுக்கு நாள் உலக நாடுகளில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் பலியாவோர் தொகை அதிகரித்து வருகின்றது. அத்தோடு பல புதிய நாடுகளும் இவ்வைரசுவின் தாக்கத்திற்கு உட்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பில் தொழுநோயாளர்களின் சிகிச்சை நிலையமாக அமைந்திருக்கும் மாந்தீவு வைத்தியசாலையினை கொரனோ வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கை திருப்புபவர்களையும், பாதிக்கப்பட்ட வேறு வேறு வெளிநாட்டு நபர்களையும் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நிலையமாக மாற்ற வேண்டும் என சில வைத்திய அதிகாரிகள் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இச்செயற்பாடானது புத்திஜீவிகள் மத்தியில் பலத்த சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது.
Quarantine என்ற ஆங்கில சொற்பதமானது தொற்று நோய் பரவுவதினை தடுக்கும் முகமாக மக்களின் நடமாட்டத்தினை குறைத்தல் அல்லது மட்டுப்படுத்தல் ஆகும். Quarantine என்பது quaranta giorni என்ற இத்தாலிய சொல்லினை அடிப்படையாக கொண்டே உருவாகியது. இதன் கருத்து நாற்பது நாட்கள் என்பதாகும். அதாவது முந்திய காலங்களில் ஓர் கப்பல் இத்தாலியினை அடையுமாயின் அவர்கள் அக்கப்பலில் உள்ளவர்களை நாற்பது நாட்கள் தடுத்து வைத்த பின்னரே தமது நாட்டுக்குள் உள்நுழைய அனுமதிப்பர். இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஏதாவது தொற்று நோய் உள்ளதா என அவதானிப்பர், இருப்பின் அதற்கு சிகிச்சை வழங்குவர். அதன் பின்னரே தமது நாட்டிற்கு அனுமதிப்பர். தமிழில் quarantine என்பதினை தனிமைப்படுத்தப்பட்ட வைத்திய சாலை அல்லது விடுதி என அழைப்பதே சிறப்பானது.
இவ்வாறான ஓர் நிலையில் மாந்தீவில் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்க முற்படுவது பின்வரும் சந்தேகங்களினை ஏற்படுத்தியுள்ளது.
1. மாந்தீவு வைத்தியசாலையானது ஆங்கிலேயரினால் தொழு நோயாளருக்கு கிசிச்சை அளிப்பதற்கென உருவாக்கப்பட்டது. அது ஓர் ஒதுக்கு புறத்தில், இலகுவில் அடையமுடியாத இடமாக அக்காலத்தில் இருந்தது. இதன் மூலம் தொழு நோயாளர் வெளிஉலகத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் வெளிச்செல்வது தடுக்கப்பட்டது. தொழு நோய் அற்றவர் ஒருவர் தொழு நோய் உள்ளவர்களுடன் நீண்ட காலம் தொடர்பில் இருக்கும் பொழுது அவருக்கு அந்த நோய் ஏற்படுகின்றது. ஆனால் கொரனோ வைரசுவின் தாக்கம் அவ்வாறு அன்று அது மிக இலகுவாக மற்றவருக்கு (highly contaginous) பரவி விடுகின்றது. இதன் காரணமாகவே உலக நாடுகள் இந்த வைரசுவினை கண்டு அச்சம் கொள்கின்றன. இந்நிலையில் மாந்தீவு வைத்திய சாலையில் கொரனோ வைரசுவின் தாக்கத்தினை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், சிற்றுழியர், ஆய்வுகூட வசதி மற்றும் தொற்று நீக்கும் வசதி போன்றன உரிய வசதிகள் காணப்படுமா என்றால் நிச்சயம் இல்லை.
மேற்குறித்த வசதிகள் செய்யப்பட் டால் கூட சிறப்பு வைத்தியர்களின் (Virologist, Microbiologist and other specialist) மேற்பார்வை மற்றும் MRI (Medical Research Institute) நிறுவனங்களின் போன்ற ஆய்வுகூட வசதிகள் கொழும்பினை தளமாக கொண்டே கிடைக்கப் பெறுகின்றன. எனவே இவற்றினை பெறுவது பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் கொழும்பில் இருந்து வைத்தியர்கள் வருகை தந்தாலும் அவர்கள் வாராந்தம் ஒருசில நாட்கள் மட்டுமே தங்கி நிற்பர். அவர்களை நம்பி இத்தகைய சவால் மிக்க சிகிச்சையினை ஆரம்பிக்கலாமா?
2. பொதுவாக இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகள் அல்லது முகாம்கள் விமான நிலையம் அல்லது துறைமுகம் போன்றவற்றினை அண்டியே அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் உள்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதினை குறைக்கும் முகமாகவே.
இலங்கையிலும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவற்றினை தவிர்த்து மிக தொலைவில் இருக்கும் மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன ?
3. இவ்வாறு தெரிவு செய்ததன் மூலம் அப்பிரதேச மக்களுக்கும்,அம்மாகாண மக்களும் கொரனோ வைரசுவின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாகும்.ஏனெனில் நோய்தொற்றடைந்தவர் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்பு துறைமுகம் போன்றவற்றில் இருந்து இவ்வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படுவர். அவ்வாறு கொண்டுவரப்படும் பாதை முழுவதுமே நோய் பரவும் சாத்தியம் உள்ளது.
4. நோயாளிகளை தரைப் பாதை தவிர்ந்து உலங்கு வானுர்தி மூலம் கொண்டுவருவது சாத்தியப்பாடு குறைவானது. அத்துடன் ஓர் நோயாளி கொரனோ வைரசுவின் தாக்கத்தினால் இறப்பராயின் உடலை என்ன செய்வது?
உடலினை உலங்கு வானுர்தி மூலம் கொண்டுசெல்வது சாத்தியம் அற்றது. இறந்த உடல் நிச்சயம் ஆபத்தானது. சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு இவ்வாறு கொரனோ தொற்றடைந்த அல்லது சந்தேகங்களுக்குரிய மரணங்களுக்கு எவ்விதமான உடற்கூறாய்வுப் பரிசோதனைகளும் செய்ய வேண்டாம் என கண்டிப்பான அறிவுறுத்தல் வேறு விடுக்கப்பட்டுள்ளது.
5. இலங்கையில் ஏற்கனவே இவ்வாறு ஏற்படும் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென முல்லேரியாவில் IDH (Infectious Disease Hospital) என்ற வைத்தியசாலை பெரும் வசதிகளுடனும் உரிய வைத்திய நிபுணர்களுடனும் செயற்பட்டு வரும் நிலையில், மாந்தீவு வைத்திய சாலையினை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?
6. ஏற்கனவே துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவற்றில் செய்யப்பட்டு வரும் இத்தகைய வைத்திய சாலைகள் போன்றவற்றின் பங்களிப்பு என்ன ?
இவ்வாறான திடீர் நடவடிக்கையினால் நிச்சயம் பாதிக்கப்படுவது மக்கள் தான். மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வைத்தியர்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குறியாகின்றது. அவர்கள் மக்களுக்கு உண்மையில் நன்மை செய்ய விழைகின்றனரா? அல்லது மறைமுகமாக தாம் நன்மையடைய முற்படுகின்றனரா?
என்ற கேள்விக்கான பதிலே முக்கியமானது ஆகும்.
0 comments :
Post a Comment