Wednesday, February 19, 2020

கடும் நிபந்தனைகளுடன் அஜித் பிரசன்ன பிணையில் விடுதலை.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன கொழும்பு மேல் நீதிமன்றினால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அஜித் பிரசன்னவை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணையிலும் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணை அடிப்படையிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடக சந்திப்புக்களை நடாத்த பிரதிவாதிக்கு முழுமையாக தடை விதித்து பிணை நிபந்தனையொன்றும் நீதபதியால் விதிக்கப்பட்டது.

இந்த பிணை நிபந்தனை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து பிரதான அச்சு மற்றும் மின்னணு ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதியால் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனை பிரதிவாதியால் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பில் கண்காணிக்குமாறு இரகசிய பொலிஸின் பணிப்பாளருக்கு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த நிபந்தனையை பிரதிவாதி மீறும்பட்சத்தில் அது தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதியால் குறித்த பிணை நிபந்தனை மீறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டால் அவரின் பிணை ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் வழங்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment