ரவிப்பிரியவை தூக்கக்கோரி தொழிற்சங்கங்கள் அழுத்தம்! கோத்தா-மஹிந்த மோதல் முற்றுமா?
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவ அதிகாரி ஒருவரை இவ்வாறான உயர் பதவிக்கு நியமிப்பதை அரச நிர்வாகச் சேவை தொழிற்சங்கங்கள் எதிர்த்தன.
பல்வேறு வழிகளில் தமது கண்டனத்தை தெரிவித்த அவர்கள் நேற்று வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து குறித்த நியமனத்தை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது ஓய்வுபெற்ற ஜெனரல் விஜித்த ரவிப்பிரியவை அப்பதவியிலிருந்து நீக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து பதவி நியமனங்களில் ராஜபக்சர்களிடையே பனிப்போர் ஒன்று இடம்பெற்றுவருகின்றமை யாவரும் அறிந்த விடயம். வியத்மக என்ற அமைப்பைச் சேர்ந்தோரை கோத்தபாய நியமிக்க முற்படுகின்றமையும் மஹிந்த தனது அரசியல் சகபாடிகளை நியமிக்க முற்படுகின்றமையும் , சில நியமனங்கள் இருதரப்பாலும் எதிரும் புதிருமாக ரத்துச் செய்யப்பட்டமையும் அவதானிக்கப்பட்ட விடயங்களாகும்.
இந்நிலையில் தனது விசுவாசி என கோத்தபாய நம்பும் ஒருவரை சுங்கத்திணைக்களத்தின் இயக்குநராக நியமித்துள்ளார். ஆனால் அதற்கு தொழற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்;துள்ளது. இங்கு ஆராயப்படவேண்டிய விடயம் யாதெனில் இலங்கையில் சுயாதீன தொழிற்சங்கங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் அனுசரணையுடன் அவர்களின் நிகழ்சி நிரலில் செயற்படுபவை. அவ்வாறாயின் மஹிந்தவிடம் இந்த வேண்டுதலை விடுத்த தொழிற்சங்கம் யாது? அவர்களது வேண்டுதலை கோத்தாவிற்கு எதிராக மஹிந்த ஏற்றுக்கொள்கின்றார் என்றால் அதன் பின்புலம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில்தேடும்போது, முரண்பாடு முற்றுகின்றதா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.
0 comments :
Post a Comment