Thursday, February 13, 2020

இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இஸ்ரேல் ஆர்வம்

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு அதன் நன்கு வளர்ச்சியடைந்த தொழிநுட்ப திறன்களை வழங்குவதற்கு இஸ்ரேல் தயாராகவுள்ளது.

நவீன விவசாயம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகியவை இவ் ஒத்துழைப்பின் முன்னுரிமைக்குரிய துறைகளாக விளங்கும்.

புது டில்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரொன் மல்காவுக்கும் (Ron Malka) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற உரையாடலின் போதே இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்த திரு.மல்கா, தனது வருகையின் நோக்கம் இரு நாடுகளுக்குமிடையிலான மேலதிக ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து ஆராய்வதாகும் எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது இஸ்ரேலுக்கான தனது மூன்று விஜயங்களை நினைவு கூர்ந்த ஜனாதிபதி , இலங்கையின் பொருளாதாரத்தில் தெரிவு செய்யப்பட்ட துறைகளை நவீனமயமாக்க இஸ்ரேலினால் இலங்கைக்கு உதவ முடியுமென தெரிவித்தார்.

“தேசிய பொருளாதாரத்திற்கான பங்களிப்பையும் தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களின் எண்ணிக்கையையும் கருத்திற் கொள்ளும்போது விவசாயத்துறை எமக்கு மிகவும் முக்கியமானதாகும். அது பெருமளவு பாரம்பரிய முறைமைகளிலேயே தங்கியுள்ளது. விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைக்கப்பெறுவதில்லை. அவர்கள் நீண்டகாலமாக வறுமையுடன் வாழ்கிறார்கள். எனவே விவசாயத் துறையை ஒரு தொழிலாக தெரிவு செய்வதற்கு இளைஞர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே போதுமான வருமானத்தை ஈட்டுவதற்கும் இளைஞர்களை ஈர்ப்பதற்கும் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவது அவசியமாகுமென்று” ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாயத்திற்காக நவீன முறைமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள விவசாய செயற்பாடுகளுக்கு பெறுமதி சேர்ப்பதற்கு தனது நாட்டினால் முடியுமென இஸ்ரேலிய தூதுவர் சாதகமாக பதிலளித்தார்.

கல்வி மற்றும் தொழிற் பயிற்சித் துறையை நவீன மயப்படுத்துவதற்கும் உதவக்கூடிய இயலுமை குறித்தும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர மற்றும் இஸ்ரேல் தூதரகத்தின் முதலாவது செயலாளர் Noa Hakim ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com