ஐ.நா தீர்மானம் எங்கள் அரசியல் யாப்பை மீறுகின்றது. ஆகவே வெளியேறுகின்றோம். ஐ.நா வில் முழங்கினார் தினேஸ்
இலங்கை இணை-அனுசரணை வழங்குவதாக அறிவித்துக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40/1 மற்றும் அதற்கு முந்திய 30/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து விலகுவதாக வெளிநாட்டமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்று 26ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் பொதுச்சபையில் பேசியபோது இவ்விடயத்தினை அறிவித்த அவர் மேற்படி தீர்மானங்கள் இலங்கையின் இறையாண்மையை மற்றும் அரசியல் யாப்பின் அடிப்படைகளை மீறுவதாக தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் அனைத்து மக்களது உரிமைகளை பாதுகாக்கவும் அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து ஒரு துப்பாக்கி ரவைகூட பிரிவினையில் பெயரால் நாட்டில் தீர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் மூலம் நிலையான அமைதியை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்த அவர் ,ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யதார்த்தமற்றதும் அரசியலமைப்பை மீறியதும், நிறைவேற்றமுடியாததுமென தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மூலமான மேம்பாடு குறித்தும் சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வு குறித்தும் அமைச்சர் இங்கு பிரஸ்தாபித்தார். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இந்த தீர்மானத்தை முன்னாள் இலங்கை அரசாங்கம் முன்வைத்தது என்று அவர் கூறினார்.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய விவகாரத்தில் விசாரணை நடத்திய முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மறுஆய்வு செய்ய இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என்று அவர் கூறினார்.
0 comments :
Post a Comment