கிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் அதனை தேசிய கணக்காய்வு அலுவலகம் தனது விசாரணைஅறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தரை தவறாக வழிநடத்தி இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி திருவையாறு கிராமத்தின் மைதான வீதியானது கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் முற்று முழுதாக சேதமுற்ற விடயம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திருவையாறு கிராமத்தில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட வீதி தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் விசாரணை செய்யப்பட்ட அறிக்கையின் பிரதி ஒன்றை கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கரைச்சி பிரதேச செயலகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப்பெற்ற அறிக்கையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் பின்வரும் மோசடிகளை கண்டறிந்து உறுதிசெய்துள்ளனர்.
ஆதாவது மதிப்பீட்டின்படி 100mm அளவுடைய கருங்கற்கள் வீதி வேலைக்கு பயன்படுத்தப்படல் வேண்டும் கணியச் சிட்டையிலும் அதே அளவுடைய கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளதாக காட்டப்பட்டிருந்தது. ஆனால் வீதியில் 70mm தொடக்கம் 80mm அளவுடைய கருங்கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் வீதி வேலைகளில் 100mm அளவுடைய கற்கள் அடுக்கப்பட்டு நீர் ஊற்றப்பட்டு செப்பனிடப்படும் போது வீதி சேதமடைவது தடுக்கப்படும். இங்கு தொழில்நுட்பவியலாளரின் நாளாந்த வேலைக் குறிப்புப் புத்தகத்தில் குறித்த வேலை மேற்கொண்டமை உறுதிப்படுத்தக் கூடிய வேலை விடயங்கள் காட்டப்பட்டிருக்கவில்லை.
மதிப்பீட்டின் பிரகாரம் தார் முதல் தடவையில் ஒரு சதுர அடிக்கு 2 லீற்றர் வீதமும் 180 லீற்றர் அளவுடைய 10 பரல் தாரும் இரண்டாவது தடவையில் ஒரு சதுர அடிக்கு 1 லீற்றர் வீதம் 180 லீற்றர் அளவுடைய 05 பரல் தாரிடல் மேற்கொள்வதாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் முதலாவது வேலையின் போது ஒரு சதுர அடிக்கு 2 லீற்றர் என்ற வீதத்தில் பயன்படுத்தப்படாது 180 லீற்றர் அளவுடைய 09 பரல் மட்டுமே பயன்படுத்தி வேலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொழில்நுட்பவியலாளரது குறிப்பு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ளது. இங்கு தாரிடல் மதிப்பீட்டிற்கு அமைய செவ்வனவே நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. வீதியினை நேரடி செவ்வை பார்த்தபோது வீதியில் தாரிடல் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்காமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதி வேலையானது 2019 யூன் 30 ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்டதாக வேலை நிறைவேற்றல் அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதேச சபையின் தவிசாளர், தொழில்நுட்பவியலாளர் ஒப்பமிடப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்த போதும் நிறைவேற்றல் அறிக்கை தயாரித்த தொழில்நுட்பவியலாளரது களவிஜய குறிப்பு புத்தகத்தில் தாரிடல் வேலையானது இரண்டாவது தடவை 2019 ஆகஸ்ட் 09 ஆம் திகதி 07- பரல் தாரிடலும் மேற்கொள்ளப்பட்டதாக காட்டப்பட்டிருந்தது. வேலை நிறைவேற்றல் அறிக்கை தயாரித்தது முன்னரும், வேலை நிறைவேற்றியமை பின்னரும் இடம்பெற்றுள்ளது. இவ் விடயமானது தொழில்நுட்பவியலாளரது களவிஜய குறிப்பு புத்தகத்தினூடாக அவதானிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு பெறும் நோக்கிற்காகவே வேலை நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு 2019 நவம்பர் 19 ஆம் திகதிய கரைச்சி பிரதேச சபையின் வீதி அமைப்பினை மேற்பார்வை செய்த தொழில்நுட்பவியலாளரின் கடிதத்தில் மண்ணின் களித்தன்மையினால் இவ்வாறு சேதமடைந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். வீதி வேலை மேற்கொள்ளும் போது மண்ணின் இயல்பை, நில அமைப்பை சோதனை செய்த பின்னரே வீதி வேலை மேற்கொள்ள வேண்டும். இங்கு வேலை மேற்கொள்ளும் இடம் தொடர்பான நிலத்தின் மண் அமைப்பினை கவனத்தில் கொள்ளப்படாது வேலை நிறைவேற்றப்பட்டிருந்தமையும் - தொழில்நுட்பவியலாளரது அறிக்கையினூடாக அவதானிக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலகத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்தினூடாக மூலதன வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் உத்தியோகத்தரே குறித்த திருவையாறு மைதான வேலைத்திட்டத்தின் ஒப்பந்தகாரராகவும் செலவுறுதி சிட்டையில் காட்டப்பட்டிருப்பது அக்கறையில் முரண்பாடாக கணக்காய்வில் அவதானிக்கப்படக்கூடியதாக உள்ளது
மேலும் கரைச்சி பிரதேச சபையின் 2018ம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப்பத்திரத்தினை அவதானித்தபோது 0929 இலக்கமுடைய வியாபார அனுமதியானது 3039 இலக்க கோவையினூடாக திருவையாறு மேற்கு, கிளிநொச்சி எனும் முகவரியில் க.பிருதிவிராஜ், ச.பத்மநாதன் என்பவருக்கு துர்ஜா பில்டேஸ் கல்லாக்கல் மற்றும் விநியோகம் எனும் வியாபார நிலையத்தினை நடாத்துவதற்கு பிரதேச சபையின் சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கல்லாக்கல் மற்றும் விநியோகம் மேற்கொள்ள அனுமதி வழங்கிய துர்ஜா பில்டேர்ஸ் இற்கு கரைச்சி பிரதேச செயலகத்தின் கம்பரெலிய வேலைத்திட்டத்தின் திருவையாறு மைதான வீதி வேலையினை மேற்கொண்டிருப்பதும், வியாபார அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிராத ஒப்பந்த வேலையில் ஈடுபட்டிருப்பதும் வியாபார அனுமதிப்பத்திரத்திற்கு மாறாக இருந்தமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீதி ஆரம்ப இடமான திருவையாறு கிராம அலுவரின் அலுவலகத்தின் முன்பக்கத்தில்காணப்படுகின்ற இவ் வீதியுடன் தொடர்புபடுகின்ற மற்றைய வீதிகள் கிறவல் வீதிகளாக காணப்படுகின்றபோது ரூபா. 1,918,799 ஆன பெறுமதியில் அமைக்கப்பட்ட வீதி மக்களது பாவனைக்குமிகவும் இடையூறாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.
வீதி வேலைக்கான மதிப்பீட்டில் ரூபா 6000 ஆன பெறுமதியில் வீதி – வேலையினை காட்சிப்படுத்தி பெயர்ப்பலகை இடுவதற்கு ரூபா. 6000 ஆன தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் மதிப்பீட்டின் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு திருவையாறு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்ட வேலை அரசநிதி சுற்றறிக்கை 2012/01 இற்கு மாறாக துணை ஒப்பந்ததாரருக்கு வழங்கி இருப்பதும், வேலையை மேற்கொண்ட ஒப்பந்தகாரர் வீதி வேலைகளை மேற்கொள்ள அனுமதி இல்லாத நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட 250m தூர வேலைத்திட்டத்தில், 230m க்கு மேற்பட்ட தூரத்திற்கு பாரிய குழிகளாக சேதமடைந்து காணப்படுகின்றது.
உள்ளிட்ட பல்வேறு மோசடிக்களை தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டறிந்து விசாரணை அறிக்கையினை தயாரித்து பிரதேச செயலர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அர அதிபர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
0 comments :
Post a Comment