நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை கொண்டுவந்து 19லிலுள்ள சீர்கேடுகளை ஒழிப்பேன். குமுறுகிறார் கோத்தா.
19 ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைத்து பலமான அரசாங்கத்தை உருவாக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடனான நிர்வாக கட்டமைப்பினை நிச்சயம் தோற்றுவிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த அவர், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பலமான அரசாங்கத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பலமானதொரு அரசாங்கம் தேவை என்றும் குறிப்பாக, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினால் கடந்த 5 வருடங்களில் அரச இயந்திரத்தின் பலம் மற்றும் அதிகாரங்கள என அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
எனவே 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மீண்டும் பலமிக்கதொரு அரசாங்கம் மற்றும் நிறைவேற்றிதிகார ஜனாதிபதி முறையின் மூலம் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது இந்தியா சீனா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளமையினால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறினார்.
இதேவேளை மீண்டும் தீவிரவாதத்தை அல்லது மத ரீதியான அடிப்படைவாதத்தை தலைதூக்க ஒரு போதும் விட மாட்டேன் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் வலையமைப்பு இனங்கண்டுள்ளதாகவும் இளைஞர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment