நீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். இதுதான் இன்றைய இலங்கை நீதித்துறையின் நிலைமை. இலங்கையின் நீதித்துறையிலுள்ள சிலரது செயற்பாடுகளால் ஒட்டுமொத்த நீதித்துறை மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசினார்கள் என்று வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவுகளில் நீதிபதிகளும் அடங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதியாகவிருந்த ஹிகான் பிலப்பிட்டிய சுயாதீன ஆணைக்குழுவின் சிபார்சின் பெயரில் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடிவிறாந்தை பெற்றுக்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தார். இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் கிடுங்குப்பிடி பிடித்துக்கொண்டனர். சட்ட மா அதிபரின் ஆலோசனையை நிறைவேற்றாது, இவ்விடயம் தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள பொலிஸ் மா அதிபர் நிபுணர் குழுவொன்றை நியமித்தார்.
அதேநேரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றை நாடிய உயர் நீதிமன்ற நீதிபதி ஹிகான் பிலப்பிட்டிய தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வேண்டினார். இது விடயத்தில் நேற்று நீதிமன்றில் சூடான விவாதங்கள் இடம்பெற்று நீதிமன்று ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இடம்பெற்ற தொடர் விசாரணைகளின் முடிவில் உரிய நீதிமன்ற உத்தரவின்றி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்ய முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது.
தான் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கிஹான் பிலபிட்டியவால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம் நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டது. இரு தரப்பினராலும் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் மனு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
இதேநேரம் கடந்த 2013 ஆண்டு தான் விசாரணை செய்த வழக்கொன்றிற்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக கையூட்டு பெற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட சுனில் அபயசிங்க என்ற நீதிபதிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் லஞ்சமாக பெற்றுக்கொண்ட 300000 ரூபாய்களையும் மீளச் செலுத்துமாறும் தட்டப்பணமாக 20000 ரூபா செலுத்துமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தண்டப்பணத்தை செலுத்த தவறின் மேலுமொரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குறித்த நீதிபதி லஞ்சம் பெறுவதற்கு உடந்தையாகவிருந்து உதவிகளை புரிந்த அவரது பாதுகாப்பு உத்தியோகித்தரான பொலிஸ் கொஸ்தாபல் மஹிந்த கித்சிறி என்பவருக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். நீண்ட விசாரணைகளின் பின்னர், குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்களுக்கப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மேற்படி தண்டனை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபண்டிகே யால் வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment