Tuesday, January 14, 2020

70 வருடங்களாக தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களுக்குப் பூச்சாண்டியே காட்டினார்கள்! பிரதமர்

தேசிய கீதத்தைச் சிங்களத்தில் மட்டுந்தான் இசைக்க வேண்டும் என்ற அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று பிற்பகல் தமிழ் ஊடகங்களின் தலைமைகளுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி: - வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினை தேசிய ரீதியில் வழங்குவோம் என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களே... அதற்கான வேலைத் திட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றீர்களா?

பிரதமர்: - ஆம், உண்மையில் நாங்கள் அதுதொடர்பில் கலந்துரையாடிக்கொண்டுதான் இருக்கின்றோம். வெகு விரைவில் தேர்தல் ஒன்று வரவுள்ளது பற்றி நீங்கள் அறிவீர்கள். அந்தத் தேர்தலின் பின்னர்தான் நாங்கள் அதுதொடர்பில் செயற்படத் தீர்மானித்துள்ளோம். அது நாட்டுக்கு மிக முக்கியமான விடயம் என்பதால் நாங்கள் தற்போது அதுதொடர்பில் கலந்தாலோசித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

கேள்வி: - மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா அதிகரிப்பது பற்றி ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களித்தீர்கள். அதற்கான தீர்வினை எப்போதுதான் பெற்றுக்கொடுப்பீர்கள்?

பிரதமர்: - மலையக தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இப்போது நாங்கள் கலந்தாலோசித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளோம். தோட்ட மக்களுக்கு வெகுவிரைவில் சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு ஆவன செய்வதே எங்கள் முயற்சியாக உள்ளது.

கேள்வி: - ஜெனீவா சம்மேளனம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பிரதமர்: - இம்முறை ஜெனீவா சம்மேளனத்தில் பாரிய தலையீடு இருக்கும் என நான் நினைக்கவில்லை. அடுத்துவரும் ஜெனீவா சம்மேளத்தின்போது, சர்வதேச நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த நாங்கள் ஆவன செய்வோம். அடுத்துவரும் ஜெனீவா சம்மேளத்தின்போது இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்குச் சிறப்பாக முகங்கொடுப்பதே எங்கள் எதிர்பார்ப்பாகவுள்ளது.

கேள்வி: - தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதியின் எண்ணப்பாட்டில் வேறுபாடு காணப்படுகின்றதே. எழுபது ஆண்டுகள் தமிழ் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியதாகச் சொல்கிறாரே. தற்போதைய அரசு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தனது எண்ணப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதா?

பிரதமர்: இல்லை. அவ்வாறாக எண்ணப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. 70 ஆண்டுகளாக தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள். தமிழ் ஊடகங்களும் அதற்கு அநுசரணை வழங்கின என நான் நினைக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடத்தில் இருந்த காலத்தில் தமிழ் ஊடகங்கள் இவ்வாறு செயற்படவில்லை. சென்ற நான்கரை ஆண்டுகள் முழுதும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே இருந்தது. அவர்கள் வடக்குத் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வினை வழங்க முன்வரவில்லை. தமிழர் பிரச்சினையாக இருக்கலாம்... காணாமற்போனாேர் பிரச்சினையாக இருக்கலாம்... வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளாக இருக்கலாம் எந்தவொரு பிரச்சினைக்கும் சென்ற அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அன்று தாய்மார் காணாமற்போன தங்களின் பிள்ளைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, சில அரசாங்கத்தின் முக்கிய தலைமைகள் வாகனங்களில் அவ்விடத்தினால் சென்றார்கள். அவர்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. என்றாலும் அவர்களுக்கு வாக்களித்து அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக நின்றவர்கள் தமிழ் மக்களே. எச்சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே பாதுகாத்து வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசாங்கமே. அபிவிருத்தி ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்தளவு அவர்கள் உருவாக்கிய ஒரு கால்வாயை எனக்கு உங்களால் காட்ட முடியுமா?

மகிந்தானந்த அலுத்கமகே: - சென்ற தேர்தல் காலகட்டத்தில் நாங்கள் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்தோம். அப்போது தமிழ் மக்களுக்கு இருந்த பாரிய பிரச்சினை வாழ்வதற்கான பிரச்சினை. அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் இல்லை. அங்குள்ள மக்களுக்கு வீதிகள் இல்லை. நாங்கள் அந்தக் கிராமத்திற்குள் சுற்றினோம். நாங்கள் கண்ட ஒரே காட்சி என்னவென்றால் அங்குள்ள மக்களுக்கு வாழக்கூடிய வழியில்லையே என்பதுதான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com