Sunday, January 12, 2020

புலம்பெயர்ந்துள்ள தமிழரை தாயகம் திரும்பட்டாம்! அழைக்கின்றார் விக்கினேஸ்வரன்

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் நாட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட காமச் சாமியின் சீடன் சி.வி.விக்னேஸ்;வரன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்ததாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை வேலூர் ஊரீசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். அவ்வாறு இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கிடவும் வேண்டும்.

போர் சமயங்களில் இலங்கையில் இருந்து 10 லட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழர்களுக்கு உரிய வழமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திட பலமாக அமையும். மேலும், அவ்வாறு இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன. அங்கு இன்னும் ராணுவ முகாம்கள்தான் உள்ளன. அந்த நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

புதிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை பௌத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அவரது போக்கு விரைவில் வரக்கூடிய பிரதமர் தேர்தலுக்கு பிறகே உறுதியாக தெரியவரும். அவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கள, பௌத்தர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை மேற்கொண்டால் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றார்.


No comments:

Post a Comment