Monday, January 6, 2020

செஞ்சோலை சிறார்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்த சிறிதரன்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் கிளிசொச்சி மலையாளபுரம் பிரதேசத்தில் , அனாதரவான குழந்தைகள் பலர் வளர்க்கப்பட்டனர். 2009 மே மாதம் புலிகளியக்கத்தால் கைவிடப்பட்ட அவர்கள் இலங்கை அரசின் பராமரிப்பு நிலையங்களில் பாராமரிக்கப்பட்டனர். அங்கிருந்து வெளியேறிய அவர்கள், சிறிதரனின் வலையில் சிக்குண்டு நடுத்தெருவிற்குவரும் நிலையிலுள்ளனர்.

ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின் இறுதிப்பகுதியில் மலைகத்திலிருந்து மக்கள் வன்னிப்பகுதியெங்கும் குடியேற்றப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு குடியேற்றப்பட்ட மக்களில் சுமார் 47 குடும்பங்கள் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அரசகாணிகளில் குடியிருந்தனர். இவர்களுக்கு அக்காணிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரம் அக்காலத்தில் வழங்கப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் இம்மக்களை அங்கிருந்து வெளியேற்றிய பிரபாகரன், அவ்விடத்திலேயே மேற்படி சிறார்களை செஞ்சோலை என்ற பெயரில் பராமரித்து வந்துள்ளார். வன்னி இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து இக்கட்டிடத்தொகுதியை இராணுவத்தினர் பாவித்து வந்துள்ளனர். அரசின் தனியாரின் காணிகள் விடுவிப்பு திட்டத்தின் கீழ் செஞ்சோலை வளாகமும் படையினரால் விடுவிக்கப்பட்டதுடன், அவற்றை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது முண்டியடித்துச் சென்ற கிளிசொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அக்காணிகளில் செஞ்சோலையில் வளர்ந்தோரை குடியேற்றியுள்ளார். ஆனால் அவர்களிடம் அக்காணிக்கான உரிமைப்பத்திரங்கள் எவையும் இல்லை என்பதை சிறிதரன் நன்கு அறிந்து வைத்திருந்தும் இவ்வாறு அவர்களை குடியேற்றி தற்போது நடுத்தெருவிற்கு கொண்டுவந்து விட்டுள்ளார்.

அக்காணியை பிரபாகரனிடம் பறிகொடுத்த 18 பேர் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிட்டு தமது சட்ட ரீதியான உரிமத்தை நிரூபித்ததை அடுத்து மனித உரிமைகள் ஆணையகம் அக்காணிகளை உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிபார்சு செய்துள்ளது.

இதனையடுத்து கரைச்சி பிரதேச செயலர் அக்காணிகளில் சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் செஞ்சோலையைச் சேர்ந்தோரை அக்காணிகளிலிருந்து வெளியேறுமாறு உத்தியோகபூர்வமான அறிவித்தல் விடுத்திருந்தபோது, காணியை எங்களுக்கு சிறிதரன் எம்பி தான் வழங்கியவர் அவர் கூறினால்தான் நாங்கள் வெளியேறுவோம் என தொடர்ந்தும் அவர்கள் அங்கே அடாத்தாக குடியிருப்பதாக தெரியவருகின்றது. அதேநேரம் சிறிதரனின் ஆணைக்கு ஆட்டம்போடும் கரைச்சி பிரதேச செயலகம் ஒரு நடைமுறைக்கு அவ்வறிவித்தலை விடுத்துள்ளபோதும், அத்துமீறி குடியிருப்போர் காணியை விட்டு வெளியேறாதபோது மேலதிக நடவடிக்கை எடுக்கவில்லை என காணி உரிமையாளர்கள் முறையிடுகின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு உடனடி தலையீடு செய்து காணி இழந்தோரின் காணியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் குறித்த காணியில் குடியிருக்கும் செஞ்சோலையில் வளர்ந்தோரில் காணிகள் அற்றோர் இருப்பின் அவர்களுக்கு அரச காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவ்வாறு அவர்களுக்கு அரச காணிகளை வழங்கும்போது, அவர்களின் சொந்த ஊரில் அல்லது சொந்த பிரதேச செயலக பிரிவுக்குள் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவர்கள் தத்தமது பிரதேசங்களில் குடியேற்றப்படவேண்டுமென்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இவர்கள் அவர்களது விருப்புக்கு மாறூக சிறிதரனால் கிளிசொச்சியில் தனது வாக்கு வங்கியை காப்பாற்றி கொள்வதற்காக அடாத்தாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உறவினர்கள் தத்தமது சொந்த பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிலர் திருமணமாகி கணவன் பிள்ளைகளை விட்டுவிட்டு காணித்துண்டுக்காக இவ்விடத்தில் தங்கியிருப்பதாகக்கூட அறியமுடிகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபார்சு மற்றும் பிரதேச செயலகம் விடுத்த உத்தரவு என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளது.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com