Monday, January 6, 2020

வெள்ளைவேன் சர்ச்சைக்குரிய சாரதிகள் பிணையில் விடுதலை..

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக கைதான சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்ட அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர்களை பிணையில் விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி கட்டத்தின்போது இரு நபர்களை வைத்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இதனையடுத்து தேர்தலின் பின்னர், இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட வெள்ளை வேன் சாரதிகள் என கூறப்பட்ட இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ராஜிதவின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றதாக சந்தேகநபர்கள் சாட்சியம் வழங்கியதாக குற்றப் புலனாய்வு துறை தெரிவித்தது.

அத்தோடு, இந்த விவகாரத்தில் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் 20 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் ரூமி மொஹமட் அன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதவான் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com