எதிர்கட்சியின் பிரதம கொரடா நியமனத்தின் மீண்டும் ரணில்-சஜித் போர் வெடித்துள்ளது.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டமையிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவை எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிப்பதற்கான நடவடிக்கையை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கொண்டிருந்தார்.
எனினும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைச் சட்டங்களை நன்கு அறிந்துவைத்திருக்கும், அரசாங்கத்திற்கு எதிராக பலமான போராட்டங்களையும், அரசியல் செயற்பாடுகளையும் வகித்துவருகின்ற களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி அஜித் பி பெரேராவை எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிப்பதற்கான உத்தேசத்தையே ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கட்சியாக இருந்த காலத்திலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராகவும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக இருந்தபோது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட எதிர்கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காத, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டங்கள் பற்றிய போதிய அறிவு கொண்டிராத, ஆளும் மற்றும் எதிர்கட்சியினருக்கு சவாலாக இருக்காத, தன்னை பாதுகாத்துக்கொள்ளும் அரசியல் செய்துவரும் கயந்த கருணாதிலக்கவை எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிக்க கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் எடுத்த தீர்மானமானது அரசாங்கத்தைக் காப்பாற்ற எடுத்த செயற்பாடாகும் என்ற சந்தேகத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் எமது செய்தி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சித் தலைவர்கள், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்களிடையே இந்தப் பிரச்சினை குறித்து தற்போது பேச்சுக்கள் காணப்படுகின்ற நிலையில், சிறந்த தீர்மானமொன்று எடுக்கப்படாமல் ஏதோ ஒன்றுக்காக எடுக்கப்பட்ட நியமனமாக இது அமைகிறது என்று தெரிவித்த குறித்த உறுப்பினர், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சியை செயற்படுத்துவது எந்த நிபந்தனையிலாகும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு மேலும் கூறுகையில்,
எதிர்கட்சிப் பிரதம கொறடா என்ற பதவியை அஜித் பி.பெரேரா ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்தார். சஜித் பிரேமதாஸ இதுபற்றி முன்பிருந்தே அறிந்துவைத்திருந்ததோடு சிறந்த சமிக்ஞை ஒன்றையும் வெளிப்படுத்தியிருந்தார்.
உண்மையிலேயே அப்பதவிக்கு அவர் தகுதியானவர். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் மற்றுமன்றி சட்டத்துறை குறித்து போதிய தெளிவுகொண்ட அவர், சிறந்த போராட்டம் செய்யக்கூடியவரும் ஆவார்.
எனினும் சஜித் பிரேமதாஸவின் ஊடாக கயந்த கருணாதிலக்கவை எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிக்க கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த நடவடிக்கையானது ஒரே கல்லில் மூன்று குருவிகளைக் கொன்றதற்கு சமனாகும். அதாவது சஜித் பிரேமதாஸவை கட்சித் தலைவராக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்த பின்னணியில் அஜித் பி.பெரேரா தற்போது அரசியல் ரீதியாக ஓரங்கட்டியுள்ளதோடு அரசியல் ரீதியாக மரணிக்கவும் செய்யப்பட்டுள்ளார்.
பலவீனமானவர் என்பதோடு குளிரற்ற தண்ணீரையும் சூடற்றதாக்கி அரசியல் செய்யும் கயந்த கருணாதிலக்கவுக்கு அப்பதவியை வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு தனது அரசியலை நேர்த்தியாகவும், நாடாளுமன்றத்தில் நெருக்கடி இல்லாமலும் செய்துகொள்வதற்கான வழி வகுத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தனது நெருக்கமான உறுப்பினரான கயந்த கருணாதிலக்கவை சஜித் பிரேமதாஸவின் உள்ளார்ந்த ரீதியாக மனதை வென்றுகொள்வதற்கான வழியையும் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியிருக்கின்றார். சஜித் பிரேமதாஸவாதியாக இருந்துகொண்டு அவர் செயற்பட்டாலும் ரணிலின் விசுவாசிதான் என்பதை யாரும் அறிவார்கள்.
ரணில் விசுவாசியாக கயந்த கருணாதிலக்க வரலாற்றில் செயற்பட்ட காரணத்தினால்தான் அவருக்கு சிறந்த பதவிகளையும் அரசாங்கத்தில் உயர்ந்த பொறுப்புக்களையும் அவர் வழங்கினார் என்பது கயந்த கருணாதிலக்கவும் நன்கு அறிவார் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment