Friday, January 17, 2020

திருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தான் திருடர்களை பிடிக்க முயன்றதாகவும் திருடர்கள் இணைந்த தன்னை சிறையில் அடைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்காக சிறைச்சாலைக் காவலர்களால் அழைத்துவரப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த 04ம் திகதி முதல் முறையாக ரஞ்சன் ராமநாயக்கவில் மாதிவெல எம்பி உத்தியோகபூர்வ இல்லத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் சோதனை நடாத்தப்பட்டது. அதன்போது அவரது உத்தியோகபூர்வ ஆயுதத்தின் அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்தமை தெரியவந்தது. அதன் பிரகாரம் அவரை கைது செய்த கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் சட்ட விரோத ஆயுதம் ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். அதன்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பின்னர் அவரது சர்ச்சைக்குரிய சில குரல்பதிவுகள் வெளியானது. அவைதொடர்பில் கைது செய்து விசாரணை செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியது. அதன்பிரகாரம் கடந்த 14ம் திகதி கைது செய்யப்பட்ட அவர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த வழக்கிற்காக மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், திருட்டுக்கு எதிராக குரல்கொடுத்தல் இலங்கையில் கழுத்துபோகும் செயல் என்றும் கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com