நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பில் இளைஞர்களும் பெற்றோர்களும் அறிந்திருக்கவேண்டியவை
இன்றைய காலகட்டத்தில் பிரச்சினைகள் ஆரம்பிக்கும் வரை பாராமுகமாக இருந்துவிட்டு அதனை பின் தொடர்ந்து வரும் இக்கட்டான நிலைகளுக்கு வருந்தும் பிள்ளைகளாகவும் பெற்றோர்களாகவும் நாம் இருந்து வருகின்றோம். எனது இப்பதிவு காலத்தின் தேவையாகக் கருதி பதிவடப்படுகிறது.
சில பிள்ளைகள் தமது நண்பர்களுடன் இரவு நேரங்களில் அல்லது வேறு பொருத்தமற்ற நேரங்களில் கூட்டுச் சேர்ந்து செய்யும் சில சட்ட விரோத வேலைகளின் காரணமாக தங்களது பிள்ளைகளும் அகப்பட்டு சட்டத்தின் முன் குற்றவாளியாகக் காணப்படும் சந்தர்ப்பங்களில், பெற்றோர்களாகிய நாம் “எனது பிள்ளை அப்படிப்பட்டவன் அல்ல. நான் அவ்வாறு வளர்க்கவில்லை” என்று கதை கூறினாலும் சட்டத்தில் அது எவ்வாறு கருதப்படும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியமாகும்.
வழக்கொன்றில் சிலர் கூட்டுச் சேர்ந்து ஒருவருடைய வீட்டிற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்தி மரணமுண்டாக்கியதுடன் அவருடைய சகோதரனையும் பொல்லால் தாக்கியிருந்தார்கள். இச் சம்பவத்தில் தொடர்புடைய பிரதான குற்றவாளிக்கும் அவருடன் கூடச்சென்ற ஏனையோருக்கும் சமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் குறித்த வழக்கின் தண்டனையானது மீள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் “வருமுன் காப்பதே சாலச் சிறந்தது” (Prevention is better than cure) என்ற பழமொழிக்கு அமைவாக, நாம் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது முக்கியமானதாகும்.
இக் குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளைப் பார்ப்போம்.
2006ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை அத்தியாயம் 19 இன் பிரகாரம் 32, 140, 146, 296, 300 ஆம் பிரிவுகள் இக் குற்றங்கள் சார்பில் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை.
குறித்த சட்டக் கோவையின் பிரிவு 32 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவான கருத்தினை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு நபர்களினால் குற்றச் செயலொன்று புரியப்பட்டால், அத்தகையக ஒவ்வொருவராலும் அக் குற்றச் செயல் தனித்து அவரவரால் செய்யப்பட்டது போன்று அதே முறையில் அச் செயலுக்குப் பொறுப்பாளியாகிறார்கள். இதன் பிரகாரம், நபரொருவரை குறிப்பிட்ட நண்பர் குழுவொன்று கூட்டிச்சென்று அக் குழுவினால் ஏதாவது குற்றங்கள் புரியப்பட்டிருந்தால், அக் கூட்டத்தில் காணப்படும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவர்கள் குற்றமிழைத்ததற்கான சமமான தண்டனை அளிக்கப்படலாம். இங்கு, குறித்த குற்றமானது நிகழவுள்ளமை குறித்து அந்த நபர் ஏலவே அறிந்திருந்தாலும் அல்லது அறியாதிருந்தாலும் சட்டத்தின் முன் குற்றமிழைத்தவர் போன்றே கருதப்படுவார். எனவே, தமது பிள்ளைகளது நண்பர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அறிந்திருத்தல் பாரிய விளைவுகளில் இருந்து குறித்த பிள்ளைகளைப் பாதுகாக்கும்.
அதேபோன்று தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 140 ஆனது மேற்படி கூட்டுச் சேர்வதனால் வழங்கப்படக்கூடிய தண்டனை பற்றி குறிப்பிடுகிறது.
அத்தோடு, அக் கோவையின் பிரிவு 146 ஆனது பொது நோக்கத்தை முன்னேற்றுவதில் புரியப்பட்ட தவறு எதற்கும் குறித்த சட்டவிரோதக் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் குற்றவாளியாகக் கருதப்படவேண்டும் என குறிப்பிடுகிறது.
எனவே, அன்புள்ள பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகள் எவ்வாறான நண்பர்களுடன் சேர்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கவேண்டியது பின்னர் நிகழக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உறுதுணையாக அமையும். மேலும் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததன் பின்னர் அது பற்றி சிந்திப்பதில் அர்த்தமற்ற தன்மை காணப்படும் என்பது கவலையான விடயமாகும்.
மு. முஹம்மது நப்ஸர் LLB, MBA
0 comments :
Post a Comment