Wednesday, January 15, 2020

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதை தவிர்த்து தமது சுகபோகத்தையே விரும்பினராம் த.தே.கூ! மஹிந்தானந்த

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள், தங்களது சுககோபங்களையும், வாகனம் மற்றும் இல்லங்களுக்கான தேவையையும் பூர்த்திசெய்துகொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்த பின்னரே இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசாங்கம் பேச்சு நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் முற்பகல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றியோ, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தோ தமிழ்ப் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில்கூட குரல் எழுப்பவில்லை என்று சாடினார்.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் ஆயிரம் ரூபாவை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் இரவு அதிரடியாக அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது, நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து எடுக்கப்பட்டதல்ல என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment