Thursday, January 16, 2020

வடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள்! மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..

சிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் மல்வத்துப்பீட துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரர், பௌத்த மக்களிடம் இனவாதம் இல்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

தென்னிலங்கையில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் வர்த்தகம் உட்பட காணி கொள்வனவுக்கும் இடமளிக்கும் சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் விகாரை அமைக்கவோ காணிகளைக் கொள்வனவு செய்யவோ இடமளிக்கப்படாமையிட்டு தனது அதிருப்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்றைய தினம் முற்பகல் முதற்தடவையாக விஜயம் மேற்கொண்டார்.

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட விகாரைகளுக்கும் அவர் விஜயத்தை மேற்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி இழந்த பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளையும், மகாநாயக்க தேரர்களின் மனங்களையும் வென்றெடுப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அஸ்கிரியப்பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மகாநாயக்க தேரருடன் கலந்துரையாடிய சஜித் பிரேமதாஸ, சிறந்த எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயலாற்றுவதோடு மக்களுக்கு நன்மை ஏற்படும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேபோல 69 இலட்சம் மக்களும் எதிர்த்த அமெரிக்க ஒப்பந்தங்களை தற்போதைய அரசாங்கம் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்றும் கூறினார்.

இந்தியாவில் உள்ள கட்சிகளுக்குத் தெளிவான தேசிய கொள்கை ஒன்று இருப்பதைச் சுட்டிக்காட்டிய மகாநாயக்க தேரர்கள், அதேபோன்று இலங்கையிலுள்ள கட்சிகளுக்கும் தேசிய கொள்கை ஒன்றின் அவசியத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வலியுறுத்தினார்கள்.

இந்த சந்திப்பின் பின்னர் உரிகடுவே ஸ்ரீவித்தியாசாகார பிரிவெனாவின் தலைமைத் தேரரையும் சந்தித்து ஆசிபெற்றார்.

இதன் பின்னர் மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் அவரிடம் ஆசிபெற்றதோடு பின்னர் மல்வத்துப்பீட துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரரை சந்தித்து ஆசிபெற்று நீண்ட ஆலோசனையையும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரர், வடக்கு மக்கள் இனவாத சிந்தனை கொண்டவர்களாக சித்தரித்துக்காட்டினார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com