Thursday, January 2, 2020

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார். வலிகளை சுமந்த மக்களுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாவாம்!

வட மாகாண ஆளுநர் P.M.S. சார்ல்ஸ் இன்று (02) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.இதற்கான நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வட மாகாண ஆளுநரின் கடமையேற்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். மாநகர மேயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அவர் கருத்து தெரிவித்த போது வடக்கு மாகாண மக்களிடம், தீராத வலிகள் இருப்பதாகவும் அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைகள் பல இருப்பதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கோரியதாகவும், அவரது கோரிக்கைக்கமைய, வலிகளைச் சுமந்த வடக்கு மாகாண மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (02) இடம்பெற்ற பொது அமைப்புக்களின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வவுனியா மக்கள் இன்று எனக்கு வழங்கிய வரவேற்பை பாரக்கின்ற போது எனது மனம் கனத்துவிட்டது. பாரிய பொறுப்பொன்று எனக்கு சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட போது என்னுடைய அனைத்து வேலைத்திட்ட செயலாளர்களும் பணிப்பாளர்களும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து வைத்தியசாலையின் திட்டங்களையும் முன்னுரிமைப்படுத்தி அமைச்சரவை பத்திரங்களை அமைச்சரின் ஊடாக தயாரித்து கொண்டு இருந்தோம்.

இந்த வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் இந்த வைத்தியசாhலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலைக்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்குவதற்கு தயார்ப்படுத்தப்பட்டு கொண்டு இருந்தது.

இந்நிலையிலே செயலாளராக பதவியேற்று ஒரு மாத கால பகுதிக்குள் ஜனாதிபதியால் வடமாகாண ஆளுநர் பதிவியை ஏற்குமாறு கோரப்பட்டிருந்தது.

பலமுறை தயங்கியும் மறுத்தும் இருந்த என்னை உடற்சாகப்படுத்திய எனது கணவர் உட்பட திரைமறைவில் செயற்பட்ட பல நண்பர்கள், என்னோடு கடமையாற்றிய சுங்க மற்றும் சுகாதார அமைச்சின் மிக சிரேஸ்ட அதிகாரிகள் உற்சாகப்படுத்தி இந்த நாட்டிற்காகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களுக்கு ஆகவும் நீங்கள் நிச்சயமாக சேவையாற்ற வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக இறுதியில் ஜனாதிபதியின் உத்தரவையேற்று வடமாகாணத்தின் ஆளுநராக வந்துள்ளேன்.

என்னுடைய சேவைக்காலம் இன்னும் முடிவுறவில்லை இளைப்பாறுவதற்கு முன்பே நான் இளைப்பாற வைக்கப்பட்டேன். எனது பிள்ளைகள் கொழும்பில் படித்தும் பணியாற்றி கொண்டு இருக்கின்ற நேரத்தில் எனது அனைத்து தேவைகளையும் எனது குடும்பத்தின் அத்தனை சுகங்களையும் துறந்துவிட்டு இளைப்பாறுகின்ற கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த பதவியை ஏற்றிருக்கிறேன் என்றால் இது சவாலுக்குரிய விடயமாகும்.

நீங்கள் காட்டிய அன்பை பார்க்கின்ற போது பாரிய சுமையொன்று என் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்கின்றேன். நீங்கள் என்னை உங்களில் ஒருத்தி என்று சொன்னீர்கள். நிச்சயமாக நீங்கள் எல்லோரும் என்னுடையவர்கள். உங்களுக்காக நான் நிச்சயமாக இரவு பகலாக கடமையாற்றுவேன்.

ஜனாதிபதி என்னிடம் கோரிய விடயம் இந்த மாகாண மக்களிடம் தீராத வலிகள் இருக்கின்றது. ஆற்றுப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது, நிறைவுறுத்தப்படாத வேலைகள் இருக்கின்றது, தேவைப்படுகின்ற அபிவிருத்திகள் இருக்கின்றன.

அத்தனையும் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் உறுதுணையாக அனைத்தையும் செய்து தருவேன் என கூறி என்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். எனவே அவருடைய அந்த நல்ல செய்தியோடு இங்கே வந்துள்ளேன்.

எனவே இந்த மாகாணம் அனைத்து விடயங்களிலும் தலைநிமிர்ந்து உங்களை வாழவைக்கின்ற மாகாணமாக கௌரவத்துடனும், சுதந்திரத்துடனும், அமைதியுடனும் வாழ்வதற்கான மாகாணமாக மாற்றுவேன்.

அரசியலுக்கு அப்பால் கொள்கைகளுக்கு அப்பால், மதங்களுக்கு அப்பால், இனங்களுக்கு அப்பால், கருத்துக்களுக்கு அப்பால், வர்க்கங்கங்களுக்கு அப்பால், முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் என்னோடு இணைந்து நிற்க வேண்டும்.

இந்த மாகாணத்தை சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக வலிகளை சுமந்து இருக்கின்றீர்கள். வாழ்க்கைக்கு வழி தேடி அலைந்திருக்கின்றீர்கள். எனவே நிச்சயமாக நான் உங்களுக்கு நான் என்னை அர்ப்பணித்து செயற்படுவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment