கல்முனை நகர் மத்தியில் கோலம்போட்டு பொங்கல் பொங்கியது தமிழர் சேனை!
கல்முனை பிரதேச செயலகம் எனது வாழ்வு முடிவதற்கு தரமுயரும் முழங்கினார் தேரர்!
தமிழ் மக்களில் பாரம்பரிய பெருவிழாக்களில் ஒன்றான உழவர் திருநாளாம் தைத்திருநாளை கல்முனை நகர் மத்தியில் கோலம்போட்டு , கும்மியடித்து , பொங்கல்பொங்கி கொண்டாடியுள்ளது இளைஞர் சேனை.
அம்பாறை மாவட்ட செயலர் பண்டாரநாயக்க பிரத அதிதியாக கலந்து கொண்ட இவ் தைத்திருநாள் கொண்டாட்டங்களில் பிரதேசத்திலுள்ள சிவில்நிர்வாக மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது சிறப்பம்சமாகும்.
சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டத்திலே இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் இஸ்லாம் என்கின்ற நான்கு மதங்களுக்குமுரிய 10 க்கு மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் காணப்படுவது கல்முனை நகரின் பல்கலாச்சார சிறப்பம்சமாகும். இவ்வாறான பல்கலாச்சார நகரிலே இடம்பெற்ற இன்றைய தைத்திருநாள் பெருவிழாவில் இந்து , கிறிஸ்தவ பௌத்த மதகுருக்கள் கலந்து கொண்டிருந்தபோதும், இஸ்லாமிய மௌலவி ஒருவர் கலந்து கொள்ளாமை கவலைக்குரியதாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை தான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்றும் அவ்வலுவலகத்தை தரமுயர்த்தி தருகின்றேன் என மக்களை எமாற்ற முனையும் அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் படிப்பிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய தேரர் :
அரசியல் லாபங்களுக்காக கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு அலைந்துதிரியும் அரசியல்வாதிக்கு நான் சொல்லிக்கொள்வது யாதெனில், நான் இவ்விவகாரத்தை உண்ணாவிரதமிருந்து ஆரம்பித்து வைத்தேன். அதற்கான தீர்வு கிடைக்கும்வரை நான் தூங்கப்போவதில்லை, ஆனால் நீங்கள் இதில் அரசியல்லாபம் தேட முற்பட்டல் செருப்பால் அடிப்பேன் என்றார்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு. சிலர் நினைக்கின்றனர் தமிழ் மக்களை இந்தியாவிலுள்ளவர்கள்தான் காப்பாற்றவேண்டுமென்று. ஆனால் இந்த மண்ணில் பிறந்த அத்தனை மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் அதிகாரம் இருக்கிறது கௌரவம் இருக்கிறது என்பதை நீங்கள் சிறிதளவும் நம்பக்கூடாது. தமிழ் மக்களுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் முழங்கினார் தேரர்.
அப்பாவி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர் அதைத் தவிர தமிழ் மக்கள் பற்றி எவரும் கவலை படுவதில்லை. மாறாக அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான் தமிழ் மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள், நீங்கள் தான் அவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.
தமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் அச்சம். அவர்கள் பயங்கரமானவர்கள், அவர்கள் வந்தால் பயங்கரமான செயற்பாடுகளைத்தான் மேற்கொள்வார்கள் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. அனால் நாங்கள் அவ்வாறு இல்லை. நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்களே என்றார்.
0 comments :
Post a Comment