Monday, January 6, 2020

நல்லாட்சி அமைச்சர் ஒருவருக்கும் மதுஷுக்கும் இடையில் டுபாயில் டீல்... இஷாராவினால் வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகள்!

பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதுஷ் சென்ற அரசாங்க காலத்தில் அதிகம் பேசப்பட்டுவந்தவன். அவனுக்கும் அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் இரகசியமான முறையில் டுபாய் ஓட்டல் ஒன்றில் சந்தித்துள்ளமை பற்றி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

மாகந்துரே மதுஷின் இரண்டாவது மனைவியான திலினி இஷாராவை சென்ற வெள்ளிக்கிழமை (3 ஆம் திகதி) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது, இதுதொடர்பில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துரே மதுஷ் டுபாயில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அமைச்சரவையைச் சேர்ந்த குறித்த நபர் டுபாய் ஓட்டலுக்கு அழைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடைபெற்றதாக திலினி இஷாரா உறுதியளித்தார்.

சென்ற வருடம் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி டுபாய் நட்சத்திர ஓட்டலில் திலினி இஷாரா - மதுஷ் தம்பதியினரின் பிள்ளைக்கான பிறந்த நாள் விருந்துபசாரம் வெகு சிறப்பாக நடந்தபோதே அபூதாபி பொலிஸாரினால் மதுஷ் உள்ளிட்ட குழுவினர் கைதுசெய்யப்பட்டனர்.

மாகந்துரே மதுஷினை விடுதலை செய்வதற்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட இந்தப் பெண், சென்ற டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்தபோது, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

மீண்டும் இரண்டாவது முறையாக இரகசியப் பொலிஸார் சென்ற 3 ஆம் திகதி இஷாராவை அழைத்து விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் மாகந்துர மதுஷைப் பார்ப்பதற்கு அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இஷாராவுடன் குழந்தையும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

திலினி இஷாரா என்பவர் வெலிகட கலவரத்தின்போது இறந்த பாதாள உலகத் தலைவன் களு துஷாரவின் சட்டபூர்வமாக விவாகம் செய்த மனைவியாவாள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com